அன்புள்ள கே.ஜே.அ.
ஞானபீட விருதுக்கு வைரமுத்து கவிஞராகவோ, எழுத்தாளராகவோ முற்றிலும் தகுதியானவர் அல்லர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
வைரமுத்துவை முன்னுதாரணமாகக் கொண்டு உலக இலக்கியம் தமிழ்மொழியை தரம் தாழ்த்தி பேசக்கூடும் என்பது அதீத கற்பனையே.
ஏனெனில்…
இந்தி மொழிக்கு இதுவரை பதினொரு முறையும், கன்னட மொழிக்கு எட்டு முறையும், வங்க மொழிக்கு இதுவரை 6 முறையும், மலையாளத்திற்கு 6 முறையும், குஜராத்தி , மராத்தி, ஒடியா, உருது போன்ற மொழிகளுக்கு தலா நான்கு முறையும், தெலுங்கிற்கு மூன்று முறையும், அசாமியா, பஞ்சாபி, மற்றும் தமிழ் போன்ற மொழிகளுக்கு இரண்டு முறையும், காஷ்மீரி, கொங்கணி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன.(நன்றி: விக்கிபீடியா)
11 முறை இந்திக்கு அளிக்கப் பட்டுள்ளது. இதில் இலக்கிய வாசிப்பாளர்கள் அறிந்தது பிரேம்சந்த், நிர்மல் வர்மா, சமீபத்தில் International Booker விருது பெற்ற கீதாஞ்சலி ஶ்ரீ. இந்தி இலக்கிய படைப்பு பற்ற இங்கு எவரும் பெரிதாக அறிந்ததில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தி மொழிக்கு எவரும் பெரிய அந்தஸ்தையும் கொடுத்ததில்லை. ஜெ கூட பெரிதாகச் சொன்னதில்லை. இது மாதிரி நிறைய படைப்புகள் விருது பெற்றுள்ளன. தமிழுக்கு வந்தவர்கள் அதில் 5 ல் ஒருத்தரே. இவ்வளவு நீட்டி முழக்கி எழுதக்காரணம் ஒன்றுள்ளது. நான் ஜெவின் அதிதீவிர வாசகன். கிளிக்காலத்திலிருந்து என்று கூட சொல்லலாம்.
இதில் நாம் என்ன செய்யலாம்? அசோகமித்ரன், கி.ரா, சு. ரா வை நாம் இப்படித்தான் கொண்டு சேர்க்காமல் விட்டுவிட்டோம். பொதுவெளியில் தகுதி உள்ள வாழும் எழுத்தாளர்களை பிரபல எழுத்தாளர்களும், வாசகர்களும் முன்னிலைப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். விதைக்கும் காலத்தில் விட்டுவிட்டு அறுவடை காலத்தில் பதறுவதில் அர்த்தமில்லை.
சங்கரகுறுப்பு, தாராசங்கர், குவெம்பு, காண்டேகர், ஆஷாபூர்ணதேவி, கரந்த், பொற்றேக்காட், அம்ரிதா, மாஸ்தி, தகழி, பன்னாலால், குர்ரத் உல்ஐன் ஐதர், அனந்தமூர்த்தி, எம்டி, மகாசுவேதா, கிரீஷ், நிர்மல், இந்திரா, ஓஎன்வி, கம்பர், சோப்தி, அமிதவ், குல்சார்.
50 சதவீதம்கூட தமிழுக்கு வரவில்லை. நிச்சயம் மற்ற மொழிகளிலுத் இதேதான் நிலைமை. அல்லது இதை விடக்குறைச்சல் தான். இதையெல்லாம் வைத்து நாம் எந்த மொழியையும், அதன் இலக்கியப் படைப்புகளையும் உயர்த்துவதோ, தாழ்த்துவதோ இல்லை. இவ்ளோ பெரிய ஆணி எதற்கு என்று நம் குழு நண்பர்கள் நினைக்கலாம். இதை வேறு எங்கும் சொல்ல இயலாது என்பதே நிதர்சனம்.
நான் வைரமுத்துவிற்கு ஆதரவு அளிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகளால் தமிழ் இலக்கியத்திற்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது என்பதைத்தான் சொல்ல நினைக்கிறேன்.
பொ.சந்தான கிருஷ்ணன்.
அன்புள்ள பொ.ச.கி
வைரமுத்து இந்த விருதிற்கு முற்றிலும் தகுதியானவர் இல்லை என்றே சொல்கிறீர்கள். ஆனால் அவருக்கு, தகுதியில்லாதவருக்கு, அந்த விருது கொடுப்பதை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும். அவரது கவிதைகள் எந்த கவிதை தொகுப்பிலும் (கொங்குதேர் வாழ்க்கை போன்று) சேர்க்கப்பட்டதில்லை. அவரது சிறுகதை நாவல்கள் எந்த பட்டியலிலும் வந்ததில்லை. 200 சிறந்த நாவல்கள் என்று எடுத்தாலும் அதில் அவரது நாவல் வராது என்பதை நாம் அறிவோம். எந்த இலக்கிய குழுக்களிலும் அவரது சிறுகதை நாவல்கள் பேசப்படுவதில்லை. அப்படியான ஒருவர் இந்திய இலக்கியத்தின் மிக உயரிய விருதான ஞானபீட விருதை எப்படி பெறமுடியும். அகிலன் பெறும்போது அ.மி, சு.ரா. தி.ஜா, லா.ச.ரா எல்லோரும் உயிருடன் இருந்தார்கள் அவர்களது பெரும்படைப்புகள் வந்திருந்தன.
எது விருது பெறுகிறதோ அதுவே மற்ற மொழிகளில் பேசப்படும். கொண்டு செல்லப்படும். அதன் தரம் அவர்களை தமிழில் எப்படியான படைப்புகள் வருகின்றன என அறிய தரும்.
இங்கு நீங்கள் இந்தி மொழியில் அப்படி அந்தஸ்து கொண்ட நபர்கள் வரவில்லை என்று சொல்கிறீர்கள். உண்மை இருக்கலாம். ஆனால் மலையாளம், கன்ன்டம், மராட்டி, பெங்காலி போன்ற மொழிகள் அப்படி இல்லையே. தகுதியில்லாத ஒரு படைப்பும் அந்த மொழிகளில் ஞானபீட விருது பெற்றதில்லை. பஷீர், எம்டிவி, காரந்த், போன்றவர்கள் பெற்றபோது அந்த மொழிகளில் கொண்டாடி இருக்கிறார்கள். அது அவர்களின் மனசாட்சியின் வெளிப்பாடு.
இன்றைக்கு நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சி.மோகன், இரா.முருகன், தேவிபாரதி, எம்.கோ. இவர்களை விட வைரமுத்து சிறந்த படைப்பாளியா? இதை டெல்லியில் உள்ள ஒரு குழு முடிவு செய்வதை மலையாள, கன்னட, பெங்காலி மக்களும் படைப்பாளிகளும் மறுக்கும்போது நாம் ஏன் மறுக்க கூடாது.
என் மொழியில் வரும் சிறந்த ஒன்றை தேர்வு செய்ய நமக்கு உரிமை இருக்கிறது. நம் ரசனை, நம் பார்வை, நம் தேடல் எதுவோ அதுவே தமிழில் சிறந்ததாக அமையவேண்டும் இல்லையா? மற்ற மொழிக்காரர்கள் அதைதான் முயற்சிக்கிறார்கள். இந்திமொழியில் அப்படி இல்லைஎன்றால் அதை பின்பற்றவேண்டும் என அவசியமில்லை. மலையாள கன்னடத்தை பார்ப்போம். அவர்களின் தீவிரம் கொஞ்சமேனும் நமக்கு வேண்டும்.
இந்த விருதை ஒருவர் பெறுவதன் மூலம் தமிழின் பிரதிநிதியாக அடையாளமாக கருதப்படுகிறார், ஒரு லோகோ போல. நமக்கு பொருத்தமட்ட லோகோவை நாம் தேர்வு செய்ய அனுமதிக்க முடியுமா? அதுவும் யாரோ ஒரு வடஇந்திய குழு தேர்வு செய்வதை எப்படி ஏற்கமுடியும்.
வைரமுத்துக்கு விருது கொடுப்பதால் தமிழுக்கு பாதிப்பு வராதா? ஏற்படும், ஆகவே தான் இவ்வளவு கூச்சல்கள், அவர் விருது பெறுவதை யாருமே ஆதரிக்கவில்லை. எந்த அமைப்பும் ஆதரிக்கவில்லை. அவரது அடிபொடிகள் கூட எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள்.
சித்திரப்பாவை அகிலன் எழுதியது பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அங்கு நடக்கும் பல்கலைகழக கூட்டங்களில் இந்த நூல் விவாததிற்கு வரும்போது தமிழ் இன்னும் புனைவிலகியத்தில் வளரவில்லை என்றே பேசப்பட்டன. தமிழில் வந்த மிகச் சிறந்த இல்க்கியங்கள் எங்கும் செல்ல முடிவதில்லை என்பதை யாரும் அறிவார்கள். உதாரணமாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு அத்தனை மொழிபெயர்ப்புகள் நடக்கும்போது தமிழிலிருந்து மலையாளத்திற்கு அத்துனை மொழிபெயர்ப்புகள் நடைபெறவில்லை. காரணம் இம்மாதிரியான விருது முன்னெடுப்புகள் தாம். மலையாள, கன்னட மொழிபெயர்ப்புகள், சாகித்ய, என்பிடி அல்லாமல், நடைபெறுகின்றன. தமிழிலிலிருந்து அப்படி எதுவும் நிகழவில்லை.

No comments:
Post a Comment