Sunday, February 23, 2020

ஆன்மாவின் பயணம்: ரூஹ் நாவல் விமர்சனம்


ரூஹ் என்னும் ஆன்மாவை வழிநடத்த நமக்கு தெரிந்ததென்று எதுவுமில்லை. ஆன்மாவின் வழியில் நடக்கும் எதுவும் அர்த்தமிருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஆன்மா சென்றடையும் இடங்களில் அர்த்தங்கள் தெரிக்கும் வாழ்க்கை இருக்கிறது. ஆழத்து கடல்போல இருக்கும் நாமறியா உலகம் நமையறியும் ஒரு காலமும் வருகிறது. சோர்ந்தழைந்து பொருள் சேர்க்கும் வாழ்க்கையில் பொருளறியும் காலமும் ஒருமுறை வந்துவிடுகிறது. பலபடிகளை கடந்து மேலேறிவரும் ஒரு உயிரின் மீதான பாதாளத்தின் அழைப்பு தான் லக்ஷ்மி சரவணக்குமார் எழுதியிருக்கும் ரூஹ் நாவல்.

 
கட்டுக்குள் வராத வாழ்க்கையை ஒரு கட்டுக்குள் அழைத்துவரும் போக்கை அறிந்தவர் லக்ஷ்மி சரவணக்குமார். சொற்களை கூட்டிச் சேர்க்கும் கலையை நன்கு அறிந்திருக்கிறார். அவரது முந்தைய நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையையும் அறியாத புதிய பிரதேசங்களையும் சொல்கிறார்.

மரகதக்கல் கிடைக்கும் மனிதர்களின் வாழ்க்கை உயரும் என்கிற எண்ணத்தை மனதில் கொண்டால் அதை தேடியலைதல் முழு வாழ்க்கையையும் அதற்காகவே இழக்கும் சக்தி மனிதருக்கு தேவையாக இருக்கிறது. எது அந்த தேடலை அதிகரிக்கிறதோ அதுவே அவர்கள் கண்டடையும் மரகதக்கல். அக்கல்லை வைத்திருப்பவர்கூட அறிந்திராத தகவல்களை அறிந்தவர்கள் அவர்கள். கற்கள் மனிதனை வழிநடத்துகிறன என்கிற ஐதீகத்தை வழிநடத்தும் மற்றொரு ஐதீகம் மனிதனை வழிநடத்துகிறது.

சொற்களை கூட்டிக் கழித்து பார்த்தால் எஞ்சுவது சுமையான வாழ்க்கைதான். சுமையான வாழ்க்கையை சுமப்பதில் தீரும் சுகங்களை கண்டடையும் வழிகள். பதினெட்டாம் நூற்றாண்டில் கப்பல் மாலுமியான அஹமது ஒருவருக்கு சேர்பிக்கவென்று பெட்டியில் பத்திரமாக எடுத்துவரும் இன்னதென்று அறியாத கல் மராட்டிய மாலுமியான கனோஜி ஆங்க்ரேவின் சிறைபிடிப்பால் கைமாறுகிறது. சேர்பிக்க வேண்டி அஹமது கெஞ்சிக் கேட்டும் அதை கொடுக்க மறுக்கிறார் அவர். நாடுதிரும்ப முடியாத அவர் இந்தியா முழுவதும் சுற்றியளைகிறார். இந்தியாவின் தென்பகுதியில் வசிக்கும் இடம்பெயர்ந்து வந்த குடும்பத்தை கொண்ட விட்டல் ராவிடம் அந்த பெட்டி வழிவழியாக வருகிறது.

பெண்குரல் அமைந்ததால் தோல்பாவை கூத்தை செய்யமுடியாமல் போகும் கடைசி தலைமுறையான ஜோதியின் கைக்கு வருகிறது அந்த பெட்டி. திறந்து பார்த்து அதை விற்க நினைத்து ராபியாவின் கணவன் அன்வரிடம் கொடுக்கிறான். அதனால் கொலையுறுகிறான் அவன். அதிர்ச்சியடைந்த ஜோதி கல்லை கடலில் கரைத்து பக்கீராகி மறைகிறான். அஹமதுவிடம் தொடங்கி ஜோதியின் கைகளுக்கு வரும் கல்லுக்கு இருநூற்றாண்டு பயணம். அஹமதுவும் ஜோதியும் முக்கிய புள்ளிகள் அவர்கள் அடையும் அலைகழிப்பு வாழ்க்கையை சற்று கீறிக்காட்டுகிறது ரூஹ். தேடலில் அடைந்த ஒன்று அடைந்தபின் கிடைக்கும் அலைகழிப்புதான் புதிய வாழ்க்கை.

No comments: