Wednesday, February 19, 2020

பேரன்பின் முடியுறா வார்த்தைகள்: சி.எம். முத்துவின் படைப்புலகம்


ஒர் எழுத்தாளரின் அனைத்து படைப்புகளையும் விமர்சிக்கும் நிகழ்வு எப்போது சிறப்பானது. முதன்முறையாக தஞ்சைக்கூடல் நிகழ்வில் சி.எம். முத்து அவர்களின் அனைத்து படைப்புகளை குறித்து பேசுகிறோம். இந்நிகழ்வு அவரது 70வது பிறந்தநாளை ஒட்டி நிகழ்கிறது. ஆகவே சிறப்பானதும், தஞ்சை கூடலுக்கு நிறைவானதுமான ஒரு நிகழ்வு.

இயல்புவாத நாவல்களின் சிறப்பு அதை ஆசிரியர் தன் போக்கில் புரிந்துக் கொண்டதை எந்தவித வெளிப்பூச்சுக்கு இடமளிக்காமல் முன்னிலைப் படுத்த முடியும் என்பதுதான். அந்த அழகியலைக் கொண்டு நாம் நாவலை புரிந்துக் கொள்ள முடியும் என்கிற வகையில் எந்த சிடுக்குமற்ற நாவல் வாசிப்பை நமக்கு அளிக்கிறார் எழுத்தாளர் சி.எம்.முத்து. அவர் வெளிப்படுத்தும் புறவயசித்தரிப்புகளை நாம் ஒருங்கிணைத்து அர்த்தப்படுத்திக் கொள்ள வாசகருக்கு இடமளிக்கிறார் சி.எம். முத்து.


சி.எம். முத்து அவர்களின் படைப்புகள் தஞ்சை மண்ணின் விவசாய வாழ்வின் உள்ளடுக்குகளை பற்றி பேசுகிறது, குறிப்பாக கள்ளர் சாதியின் வாழ்வியலைப் பற்றி. சாதி உட்பிரிவுகளின் மோதல்கள், நிலத்தின் மீதான கர்வம், நிலத்தை வசப்படுத்துவதில் இருக்கும் கோபதாபங்கள், கோயில்களின் நிர்வகிப்பதில் இருக்கும் ஏற்றதாழ்வுகள், என்று ஒட்டுமொத்த மானுடவியலைப் பற்றி அவரது படைப்புகள் பேசுகின்றன. அம்மனிதர்களின் சொலவடைகள், பேச்சுவழக்கில் இருக்கும் நுண்மைகள் என்று எல்லா திசைகளையும் விரிந்து பரவிச் செல்கின்றது அவரது படைப்புகள். அவர் அறிந்த மானுடவாழ்க்கை நாம் அறியாத வாழ்க்கையின் பலதளங்களைக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.. சி.எம்.முத்து அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு சமயமும் 'சொல்ல எவ்வளவோ இருக்கு' என்றுதான் சொல்கிறார்.

பத்து நாவல்கள் வரை எழுதியிருக்கிறார். அதில் கறிச்சோறு, பொறுப்பு, அப்பா என்றொரு மனிதர், ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்துவீடும், மிராசு போன்றவைகள் முக்கியமானவையாக கருதுகிறேன். 600க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அதிகம் கொண்டாடப்படாத எழுத்தாளர்களில் சி.எம்.முத்துவும் ஒருவர். தஞ்சை மண்ணின் விவசாய வாழ்வை 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் அவருக்கு எந்த பெரிய அங்கீகாரமும் இதுவரை அளிக்கப்பட்டதில்லை.

எல்லா நாவல்களுமே விவசாயியாக இருப்பதின் தோல்விகளை விவரிக்கிறது என்றே நினைக்கிறேன். என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைக்கிறார்களோ அது கைக்கூடாமல் போகும் அவலத்தை சொல்கிறது. அதற்கான சாதிய உட்சண்டைகளை செய்கிறார்கள் அவர்கள், அவர் வார்த்தைளில் சொல்வதென்றால் கீழறுப்பு வேலைகளை செய்கிறார்கள். நிலத்தை வைத்திருப்பது முக்கியமல்ல அதை உழாமல் விட்டுவைப்பது கவுரகுறைச்சலாக கருத்தப்படுகிறது. கடன்களை வாங்கியாவது உழுதுவிடவேண்டும். அதில் நட்டம் வந்தால் கடன் பெருகி அதையும் தாங்க வேண்டும்.

மிராசுதாராக இருப்பதன் சங்கடங்களை தோல்விகளை விவரிக்கும் படைப்புகளாக சி.எம். முத்து அவர்களின் படைப்புகளை வகைப்படுத்திவிடலாம் என நினைக்கிறேன். மிராசுதார் என்கிற ஆளுமை ஒரு மனிதனுக்கு அவனது அதிகார வர்கத்தின் மூலத்திலிருந்து எழுந்துவந்தது. மிராசுதார் என்கிற அமைப்பு இந்தியா சுதந்திரம் அடைந்தபோதே தகர்க்கப்பட்டுவிட்டது. அவர்கள் தங்களை மிராசுதார் என்று சொல்லிக் கொள்வதன் பெருமை நாங்கள் ஆண்டபரம்பரை என்று சொல்லிக் கொள்வதற்கு சமாமானதுதான். மிராசுதார் பல்வேறு சாதிகளில் உண்டு. முன்னோரு காலத்தில் தம் மூதாதையினர் நிலங்களை தங்களின் கீழ் வைத்து ராஜ்ஜிய பரிபாலனை செய்துவந்தார்கள் என்கிற செய்தி அவர்களை கிளர்ச்சியுர செய்கிறது. அந்த அதிகாரத்தின் வழியே தங்களை நிலைநிறுத்த மீண்டும் முடியுமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிலமை அவர்கள் எதிர்பார்த்தது போலில்லை.

மனிதர்களுக்கு குடும்பம், தெரு, உறவுகள், ஊர், கோயில் என்கிற அமைப்புகளும், அதன் மீதான தன் இறுக்கமான பிடிமானமும் தேவையாக இருக்கிறது. அவைகளினால் அவன் அடையும் பெரிய பலன் அதிகாரம்தான். அதிகாரம் பல்வேறு இடங்களிலிருந்து ஒன்றன்மீது ஒன்றாக ஒவ்வொரு வீட்டையும், தெருவையும் கோயிலையும் சென்று தட்டுகிறது. ஆனால் முழுமுற்றான ஒரு அதிகாரம் ஒருவர் வைத்திருக்கும் நிலங்களை கொண்டுதான் அமைகிறது. நிலங்களை மற்றவர்களிடமிருந்து பிடுங்க நினைப்பதும், மற்றவர்களின் பிடுங்கல்களை எதிர்த்து செயல்படுவதுதான் அவர்களின் அதிகாரத்தின் மையம். இழந்த அதிகாரத்தை நினைத்து கவலை கொள்ளுவதும், வரயிருக்கும் அதிகாரத்தை நினைத்து கர்வம் கொள்வதும்தான் அவர்கள் வாழ்க்கையில் அதிகம் இருக்கிறது.

சி.எம். முத்து அவர்கள் எழுதியிருக்கும் கதைகள் எல்லாமே இந்த இருநிலைகளின் எல்லையில் நிற்கும் மனிதர்களைப் பற்றியவைகள்தாம். தஞ்சாவூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள இடையிருப்பு கிராமத்தில் தன் பிறப்பிலிருந்து வாழ்ந்துவருபவர். அங்கு இருக்கும் மனிதர்களின் வளர்ச்சி வீழ்ச்சிகளோடு ஊரின், நிலத்தின் மாற்றங்களையும் கண்டு வருபவர். தஞ்சை நிலத்தில் கள்ளர் சமூக அமைப்பு என்பது ஒரு கட்டுகோப்பான அமைப்பாக இருந்துவருகிறது. அந்த சமூகத்தில் பிறந்தவராக அவருக்கு அதன் பிரிவுகள், உட்பிரிவுகள், மேலும் கிளைகள் இவற்றில் இருக்கும் ஏற்றதாழ்வுகளையும், சமூக படிநிலைகளின் அவையின் இடங்களை குறித்து நன்கு அறிந்தவராக இருக்கிறார்.

அவர் படைக்கும் கதாப்பாத்திரங்கள் கற்பனையானவையல்ல. அவர்கள் தினமும் அவர் வாழ்க்கையில் சந்திக்கப்படுபவர்கள். கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கு அவர் அதிகம் மெனக்கெடுவதில்லை. இருப்பதை அப்படியே சொல்லிவிடுகிறார்.

கதாப்பாத்திரங்களுக்கு அகமொழி என்று பொதுவாக எதுவும் இல்லை. அவர்கள் சிந்திப்பது பேசுவதும் ஒன்றுதான். எந்த கல்மிஷங்கள் அவர்களுக்கு இல்லை என்று சொல்லிவிடலாம். அவர்களின் உரையாடல்களைக் கொண்டு அவர்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் என்கிற முடிவிற்கு வரமுடியாது. தனிப்பட்ட அகங்காரங்கள், நெகிழ்ச்சிகள், எதுவும் இல்லாதிருப்பது அவர்களது உளப்பாங்கை புரிந்துக் கொள்ள முடிகிறது. வரலாற்றின் நேர்க்கோட்டில் எங்கும் அவர்கள் நிற்பதில்லை. உண்மையில் வரலாற்றை ஒரு பொருட்டாக மதிப்பதேயில்லை. பொதுவாக சமூக கட்டமைப்பு எதுவோ அதுவே அவர்கள்.

சி.எம்.முத்துவின் மொழி நடை
நேரடியான கதைக்கூறல் முறையால் சி.எம் முத்து நம்மை வசீகரித்துக் கொண்டிருக்கிறார். தடையற்ற மொழி பிரவாகமே அவரது படைப்பை முன்னிலைப் படுத்துகிறது. தி.ஜானகிராமனின் தளுக்கு மொழி அவரிடமில்லை. அசோகமித்திரனைப்போல வார்த்தைகளை எண்ணி வைப்பதும் இல்லை. ஆனாலும் மனதின் நேர்த்தியுடன் எழுத்தின் நேர்த்தி சேர்ந்து நெய்த அழகிய துணியாக விரிகிறது அவரது படைப்புலம். எழுதும்போது புறசூழல்கள் அவரை எந்த வகையிலும் தாக்குவதில்லை என்று தோன்றுகிறது. படைப்பை எழுதும்போது நேரடியாகவே அவர் தன் அகமனதை தொட்டுவிடுகிறார். அகமனதின் சொற்களஞ்சியம் மனிதர்களின் பேச்சுகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்து மட்டுமே பெறப்பட்டவை. எட்டாவது வரை மட்டுமே படித்திருந்த சி.எம் முத்து, பள்ளி, கல்லூரிகளின் வாசிப்பில் கிடைக்கும் கட்டுபாடான வரையறுக்கப்பட்ட கோட்பாட்டு மொழியில் அமைந்தவை அல்ல அவரது படைப்பு மொழி. பேச்சாக சிந்தித்து வைத்திருக்கும் உரையாடல் மொழி, அதில் ஒன்றை உணர்த்தும் அவசரமில்லை, ஆனால் அருகிலிருப்பவருக்கு சொல்லிவிட நினைக்கும் முனைப்பு மட்டுமே இருக்கிறது. இந்த மொழிநடைக்கு வலிந்து எதையும் அவர் செய்யவில்லை. அவர் இயல்பிலேயே அது இருக்கிறது.

அவர் பேச்சு மொழியில் இருக்கும் கிராமத்து வாசம், வெள்ளேந்தியான பாவனைகள் எல்லாமே அவர் உருவாக்கும் கதாபாத்திரங்களில் தொடர்கிறது. அதுவே அவரது நடையையும் தீர்மாணிக்கிறது. எல்லா பெண் பாத்திரங்களையும் அவர்கள் என்றே குறிப்பிடுகிறார், குழந்தைகள் எப்போது அவர் விரும்பும் குழந்தைதனத்துடன் இருக்கிறார்கள். மைய பாத்திரமாக ஒருவர் மட்டுமே இருக்கிறார், அவர் அந்நாவலின் பிரதானமாக இருப்பதால் அவரது எண்ணத்தை சொல்லும்விதமாகவே நாவலின் நடை அமைகிறது. மிராசுவில் சேது காளிங்கராயர், அப்பா என்றொரு மனிதரில்  சந்திரகாசு குச்சிராயர், ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடு நாவலில் வெங்கடாஜலபதி. ஆனால் எல்லோரையுமே அப்பா என்றுதான் விளிக்கிறார். அப்பா என்கிற கதாப்பாத்திரம் நடுவயது கொண்டவர், என்னேரமும் வயலையும் வீட்டையும் மட்டுமே நினைத்திருப்பவர். கறிச்சோறு நாவலில் மட்டும், சம்பசிவம் இளம்வயதினன் மையபாத்திரமாக இருக்கிறார்.

முத்துவின் படைப்பியல்பு
தி.ஜானகிராமனின் தொடர்ப்பில் இருந்தாலும், தஞ்சை ப்ரகாஷை தினமும் சந்திக்கும் வழக்கம் கொண்டவராக இருந்தாலும், அந்த இருவரின் பாதிப்பு அவர் எழுத்துகளில் இல்லை. அவரது அகம் எப்போதும் நிலம், நிலத்தின் மனிதர்கள், மாடுகள், போன்றவைகளை தாங்கும் எழுந்துகளின் மீதே குவிந்திருந்தது. கடன்சுமை, மகளின் காதல், மகனின் பொருப்பற்ற தன்மை, எதையும் கட்டுகொள்ளத மனைவி, ஊரின்மீதான தன் கட்டுபாடு என்று எதையும் அதே நிதானத்துடன் கையாளும் கதாபாத்திரங்கள் வெளிப்படுவது என்றுதான் இருந்திருக்கிறது. எல்லாவற்றிலும் ஒரு மரபு தொடர்ச்சி இருப்பதும், மரபை விட்டுத்தராத அதே வேளையில் மரபின்மீதான கேள்விகளையும் வைக்கும் படைப்புலம் அவரது படைப்புலகம்.

புறவயமான சித்தரிப்பின் வழியே இயல்புவாத தன்மையுடன் அதுவும் உரையாடல் தன்மையுடன் அமையும் கதைகள் மட்டுமே அவர் எழுதியிருக்கிறார். புறச் சித்தரிப்புடன் உரையாடல் தன்மையை வெளிப்படுத்தும் ஒன்றை அகசித்தரிப்பாக கொண்டிருக்கிறார். உதாரணமாக, “அங்கு சென்றபோது குறட்டைஒலி பலமாக கேட்டது. அசந்து தூங்குறார் போல.” என்று அவர் கூறுகிறார். இதில் இருக்கும் அவரது அகமொழி உரையாடல் தன்மையுடனேயே எல்லா இடங்களிலும் இருக்கிறது.

கதாபாத்திரங்களின் வழியே ஒரு எல்லைவரை மட்டுமே பயணிக்கிறார். கதாபாத்திரங்கள் அதீதமாக எதையும் சிந்திப்பதில்லை. தன்நிலைகுறித்து, இந்தசமூகம் குறித்து எந்த மனகிலேசமும் அடைவதில்லை. ஆகவே அவரது நடை எளிய நேர்க்கோட்டு தன்மையுடன் நேரடியாக நம்மை நோக்கி எந்தவித உணர்ச்சியுமற்று சொல்விடமுடிகிறது. ஒட்டுமொத்தமாக அதுதரும் பாதிப்பில் அந்த புறவயதன்மை நம்மை வசிகரித்தபடியே இருக்கிறது. திஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி ஆகியோரின் சமகாலத்தவரான சி.எம். முத்து அவர்கள் அடைந்த நவீனத்துவ, எதார்த்த‌ எல்லையை தொடாமல், பூமணியைப் போன்று இயல்புவாத எதார்த்ததிற்கு வந்தது அவரது புறச்சூழல்தான் முக்கிய காரணம்.

நாவல்களின் போக்கு
அவரது நாவல்களில் மிகச்சிறந்தநாவல் கறிச்சோறுதான். வெளியாகி 30 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அதே புதிய மொழியில் வசீகரத்துடன் காணப்படுகிறது. மற்ற நாவல்களுக்கு இல்லாத வசீகரம் அதற்கு இருக்கிறது. அதன் நேரடிதன்மையுடன் கதை சொல்லப்படுவதால் மிக அருகில் இருந்து பார்க்கும் கோணத்தை நமக்கு அளிக்கிறது என நினைக்கிறேன். தருமையாவின் காலை குளியலிலிருந்தும் சரி சாம்பசிவத்தின் ஆடு ஓட்டல்களிலிருந்தும்சரி மிக இயல்பாக அவர்கள் உலகத்திற்குள் சென்றுவிட முடிகிறது. ஐந்து பெண்களும் அக்ரஹாரத்து வீடும் நாவல் ஒரு விவசாயிக்கும் ஒரு பிராமணனுக்கும் இடையேயான நட்பின் புரிதலை கொண்டது. அப்பா என்றொரு மனிதர் நாவல் அவரது மற்றொரு சிறந்த நாவல்களில் ஒன்று. அவர‌து படைப்புமனம் உச்சத்தில் இருந்த காலத்தில் எழுதிய முக்கிய ஆக்கம் என்று அந்நாவலை சொல்லலாம். இளயமகன் சரவணனுக்கும் அப்பா சந்துராசு குச்சிராயருக்கும் இடையே நடக்கும் பனிப்போரும் புரிதல்களையும் கொண்டது தான் இந்தநாவல். உண்மையில் அவரது சொந்த வாழ்க்கையின் சுயசரிதை போன்ற விவரிப்புகளை கொண்டிருக்கிறது. மிராசு பெரிய நாவல், மூன்று தலைமுறை மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் மிராசு என்கிற பட்டத்துடன் எப்படியெல்லாம் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள் என்று விவரிக்கிறது. பட்டத்தை துறக்கமுடியாமல் வாழ்க்கையை ருசிக்கமுடியாமல் தவிக்கும் தவிப்புதான் மிராசு. வேரடிமண், பொறுப்பு, ஜட்காவண்டி போன்ற நாவல்களும் வெவ்வேறு கோணத்தில் இருக்கும் விவசாயியின் வாழ்க்கையும் மிராசுவாக குடும்பத்தில், சமூகத்தில் தோல்வியுற்று நிற்கும் காட்சியைதான் இந்நாவல்கள் கொண்டிருக்கின்றன.

கடைசியாக,
சி.எம்.முத்து தன் வாழ்க்கையை புரிந்துக் கொண்ட வேகத்துடன் நாவல்களிலும் பயணிக்கிறார். நாவல்கள் அவரது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறும் காலம் 2000க்கு பின் நிகழ்கிறது. அதுவரை தஞ்சை ப்ரகாஷுடன் தினம் இலக்கியம் பேசிவந்த காலங்கள், அவரது அடுத்த நகர்விற்கு அடித்தளமிட்டிருக்கிறது. தொழில்நுட்பம், கல்வி, ஊடக வளர்ச்சி, பொருள்தரும் சிக்கல்கள், வயதாவதின் அயர்ச்சி எதுவும் அவரை பாதிக்கவில்லை. ஒரு விவசாயியாக, மிராசுவாக தன் வாழ்க்கையில் கண்டடைந்த சீர்மையை, ஒழுங்கை, படைப்புகளின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார். அதுதான் அவரது எழுத்தின் முழுபலம்.

[16/2/2020 அன்று தஞ்சைக் கூடலின் முத்து70 விழாவில் பேசியது]

No comments: