நாற்பது வயதிற்குமேல் சகோதர சகோதரிகளின் உறவுகளுக்குள்
பெரிய சிக்கல்கள் எழுவதை பார்க்கலாம். சொத்தில் எனக்கு பங்கு குறைவு, எனக்கு மரியாதை தரப்படவில்லை, என்று பல்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டு
அடித்துக் கொள்வது எல்லா குடும்பங்களிலும் நடைபெறுகிறது. வயதின் முப்பதுகளிலும் திருமணத்திற்கு
முன்னிலும் பொதுவாக பெரிய சண்டைகள் சச்சரவுகள் இருப்பதில்லை அன்புடனே பழகியிருப்பார்கள்.
ஆனால் சிறுவயதில் சிறுவர்களாக இருந்த சமயத்தில் அப்படி இருந்திருப்பார்கள் என்று சொல்ல
முடியாது. என் பொருட்களை நீ எடுத்துவிட்டாய், நீ திருடிவிட்டாய் என்று எத்தனை முடியுமோ அத்தனையும் சண்டை இட்டுக்கொள்வோம்.
நானும் என் தங்கையும் இளம்வயதில் ஒருவரை ஒருவர் கோபம் கொண்டு
பேசி தாக்கிக்கொள்வோம். அதில் முக்கியமாக ஒருவர் பொருட்களை ஒருவர் எடுத்ததாகவோ ஒருவர்
புத்தகத்தை ஒருவர் எடுத்ததாகவோ இருக்கும். சாப்பிடும்போது இச்சண்டகள் அதிகம் இருக்கும்.
சாப்பிடும்போது உணவில் கைவைத்துவிட்டதால் அந்த எச்சியை சாப்பிடமாட்டேன் என்று அடம்
பிடிப்பாள்.
அப்பா அல்லது அம்மா கொடுக்கும் சின்ன உணவுகளும் பொருட்களும்
தனக்கு மட்டுமே வேண்டும் என நினைக்கும் நினைப்புதான் அது என நினைக்கிறேன். என் மகன்
அவன் அக்காளிடம் மிகுந்த அன்புடனே இருப்பான். ஆனால் நான் அவளுடன் சற்று அதிகமாக பேசிவிட்டாள்
அவனால் பொருத்துக் கொள்ள முடியாது. என்கிட்ட நீ பேசல என்று முகமெல்லாம் கோணி பெரியதாக்
அழுது ஆர்ப்பாட்டம் செய்வான்.
விலங்குகளில் குட்டிகள் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும், ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் ஆனால்
அது பெரியஅளவினாலான சண்டையாக, ஒன்றை இல்லாமல்
ஆக்கும் சண்டையாக இருக்காது. தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும், அம்மாவிடமிருந்து உணவுகள் தனக்கே கிடைக்க சர்வைவல்
அப் த பிட்நஸ் வாழ்க்கைதான்.
அப்படியான ஒரு வாழ்க்கை தேவையாக இருக்கிறது. அது தவிர்க்கவே
முடியாதது. ஆனால் பல பெற்றோர்கள் இதை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சே... இந்த குழந்தைகளே
இப்படிதான். சனியன்க.. என்று சொல்லும் அப்பா அம்மாக்களை நான் அதிகம் பார்த்திருக்கிறேன்.
முக்கியமாக அப்பாக்கள் இந்த மாதிரியான சண்டைகள் அவர் பார்வைக்கு வரும்போது அதிகம் கொதித்துவிடுவார்.
அவர்களுக்கு இதில் இருக்கும் அன்பு புரிவதில்லை என்று பல சமயம் கண்டிருக்கிறேன். உடனே
ஒரு குச்சியை எடுத்து எதாவது ஒரு குழந்தையை அடித்து காயப்படுத்திவிடுவார்.
குழந்தையை அடிப்பதனால் தேவையற்ற வீரியங்கள் குழந்தைகளுக்கு
இடையே வளர்ந்து பின்னாலில் அது பெரிய பிரச்சனையாக மாறுவதை காணலாம். குழந்தைகளுக்கு
இடையே சண்டை வராமல் பார்த்து அவர்களுக்குள் ஒரு இணக்கத்தை உண்டாக்காத பெற்றோர்கள் பின்னாலில்
அதற்கான விலைகளை கொடுக்கப்போவது நிச்சயம்.
உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம் என நினைக்கிறேன். உறவுமுறையில்
ஒரு குடும்பம் இருந்தது. அவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூவருக்கு இரண்டாண்டு இடைவெளிகள்
இருக்கும். ஒன்றாக அன்பாக வளர்க்கப்பட்டாலும்,
குறிப்பிட்ட வயதில்
அடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். இது எனக்கு வேண்டும், நான் தான் முதலில் வருவேன். எனக்குதான் இதில் அதிகம் வேண்டும் என்று
அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். மிக சின்ன வயதுதான் என்றாலும் அவர்கள் செய்தது அவர்களின்
பெற்றொருக்கு பெரிய மன உலைச்சலாக உணர்ந்தார்கள். மூவரிடமும் ஒரே நேரத்தில் அருகில்
அமர்ந்து பேசாமல் வேவ்வேறு தருணங்களில் சமாதானபடுத்தியதோடி எல்லாம் சரியாகிவிடும் என்று
நினைத்தார்கள். சட்டென ஒருநாள் இரண்டாவது மகன்
தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டான். ஒரு பத்துவயது சிறுவன் கொள்ளும் மனஉளைச்சலை அவன்
அம்மா அப்பா கவனிக்காமல் போனது ஏன்? முக்கியமாக அவர்களின் கவனமின்மைதான்
காரணம். மிக எளிதாக தீர்க்க வேண்டிய விஷயத்தை தள்ளிப்போடுவதனாலேயே சரியாகிவிடும் என
நினைத்திருப்பார்கள் போல.
குழந்தை வளர்ப்பின் முக்கிய அங்கமே குழந்தைகளுக்கிடையில்
வரும் சச்சரவுகளை தீர்ப்பதுதான். அவர்களே தீர்த்துக்கொள்வார்கள் என்று நினைப்பதும் ஒரே குழந்தையை
அது ஆண் அல்லது பெண் என்கிறதால் அல்லது தனக்கு பிடித்த குழந்தை என்கிறதால் அதிக கவனிப்பை
செலுத்தும்போது அப்படி கவனிக்கப்படாத ஒரு குழந்தை கொள்ளும் வெறுப்பை, வஞ்சத்தை அவர்கள் கவனிக்க தவறுகிறார்கள். நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள்ளேயே
வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகள் கழித்து, கவுரவம், சொத்து போன்ற பிரச்சனைகள் வரும்போதெல்லாம்
வெளிப்பட்டுவிடுகிறது. என் சிறுவயதில்
நடந்த இந்த காரணத்தால்தான் இப்படி (இப்படி கோபத்தை அல்லது வெறுப்பை) செய்கிறேன் என்று சகோதர சண்டையின்போது சொல்லாத ஒரு மனிதரை
நாம் பார்க்காமல் இருக்க முடியாது.
இன்றைய காலத்தில் ஒரே குழந்தை அல்லது இரு குழந்தைகள் என்று
வரும்போது இன்னும் அதிக கவனம் தேவை என்று நினைக்கிறேன். இல்லையென்றால் அதிக வலிகளை
பெற்றோர்கள் சுமக்க வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment