Friday, September 11, 2015

கீழ்வெண்மணி குருதிப்புனல் ‑ இந்திரா பார்த்தசாரதி

 கீழ்வெண்மணியில் நடந்த படுகொலை என்பது நவீன உலகத்தில் தமிழகத்தின் முக்கியமான திருப்பமாகவும், திராவிட கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டை வெட்டவெளிச்சமாக எடுத்துக்காட்ட இது உதவியதுமாகவும் நினைத்தால் அது மிகையில்லை. டிசம்பர் 25, 1968ல் நடந்தது இந்த படுகொலைகள் நடந்தன‌. கீழவெண்மனியில் அப்படி என்ன நடந்துவிட்டது. கம்யூனிசம் வளர்வதையும் தலித்துகள் எதிர்குரல் உயர்த்துவதையும் விரும்பாத பண்ணையார்கள் தங்களின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் காட்ட, எதிர்ப்பவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் பயமுறுத்த செய்ய‌ப்பட்ட ஒரு ஒத்திகைதான் இந்த படுகொலைகள் என்று சொல்லலாம். அதில் 44 பேர்கள் இறந்தார்கள். நாற்பத்தி நான்கு பேரில் 39 பேர்கள் குழந்தைகளும் பெண்களும்தான், ஐந்து ஆண்களை கொல்ல 39 எளியவர்களை கொன்ற கோழைகள் என்று பண்ணையார்களை சொல்லலாம். சாதிச் சண்டை என்று முதல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இந்த படுகொலைகள், 5 ஆண்டுகள் கழித்து வெளியான நீதிமன்ற தீர்ப்பில் 'அதிக நிலங்களை சொத்துக்களை வைத்திருக்கும் பண்ணையார்கள் இப்படிபட்ட செயலை செய்ய மாட்டார்கள், அவர்கள் குற்றவாளிகள் அல்ல' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.


இந்த சம்பவத்தை மையமாக வைத்து சிலர் நாவல்கள், புத்தகங்கள், சினிமா, ஆவணப்ப‌டங்கள் என்று பல வந்துள்ளன. அவற்றில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனலை முக்கிய நாவலாக சொல்லலாம். வேறு சில நாவல்கள் வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அதற்கான தரவுங்கள் சரியாக எங்கும் கிடைக்கவில்லை. சிறந்த ஆவணப்படமாக ராமையாவின் குடிசையும், சினிமாவாக நெல்லையும் சொல்லாம் என தெரிகிறது.
குருதிப்புனலின் நாவலில் இரு நண்பர்கள் தில்லியிலிருந்து வருகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் அதன் பின் அது போராட்டமாகவும் பின் படுகொலைகளாகவும் மாறுவதை விவரிக்கிறது. இருநண்பர்கள் திருவாரூர் வருகையும் அதன்பின் கீழ்வெண்மணி கிராமத்திற்கு வருவதும் பின் வடிவேலு என்கிற டீகடைகாரரின் புகார்களை ஏற்று நாயுடுவை சந்தித்து நியாயம் கேட்க செல்கிறார் ஒருவர். நாயுடு அவரை காயப்படுத்தி வெளியேற்றுவதும் பின் ராமையா என்கிற கம்யூனிஸ்ட் கட்சிகாரருடன் சேர்ந்து மீண்டும் பேச்சு வார்த்தை தொடர்ந்த அது பிரச்சனையில் முடிகிறது. பல் கடத்தல்களும், கொலைகளும் நிகழ்கின்றன, பின் பெரும் கலவரமாக மாறி ஒரு குடிசையில் அவர்கள் தீ வைக்க பல இறக்கிறார்கள்.
நெல்லுக்கு அதிக கூலி கேட்டதும், கம்யூனிஸ்டுகளின் அடாவதுதனம் என்று தனியாக சிலர் சொல்வதையும் பார்க்க முடிகிறது. நாயுடுவின் ஆள் ஒருவர் முன்பே இறந்துவிடுவதால் இந்த போட்டி சண்டையில் தீ வைக்கபட்டதாகவும் சொல்லபடுகிறது. எதுவாக இருந்தாலும் இறந்தது 44 அப்பாவி உயிர்கள்தான். இறந்தவர்களுக்கு இதில் பெரிய சம்பந்தம் இருப்பதாக சொல்லமுடியாது. நாயுடு என்கிற அதிகார வர்க்கம் தலித் என்கிற அடிமைவர்க்கத்தை எப்படி அடக்கியது என்று பேசப்படுகிறது.
இதில் அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும், தலைவர்களின் பேச்சுகளும் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள நினைத்தால் நாம் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்படலாம். நம் வாழ்நாள் முழுவதும் செலவழித்தும் அடையப் போவது ஒன்றுமே இல்லாமல் போகலாம்.
கொலை செய்த நாயுடு இந்த நாவலில் ஆண்மையற்றவராக சித்தரிக்கப்படுகிறார். எங்கோ ஒரு பேட்டியில் அது சொல்லப்பட்டிருகிறது. அதைக் கொண்டு நாவலாசிரியர் உளவியலாக சிலவற்றை சொல்லவருகிறாரா என்று நினைக்க தோன்றுகிறது.
நாவலின் கடைசியில் தேவர் வருக என்கிற மற்றொரு குறுநாவலும் இணைக்கப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளை எப்படி பழிவாங்குவது என்கிற கோணத்தில் எழுதப்பட்டிருந்தாலும், நாயுடுவைப் போன்ற சாதி வெறியர்களை எப்படி தண்டிப்பது என்பதைப்பற்றி எதுவும் சொல்லாதது குறைதான். அத்தோடு வெளியிலிருந்து வரும் இருவரின் பார்வையில் கதை வருகிறது. மிக்கிய பாத்திரமான ராமையாவின் பார்வையில் இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.

No comments: