Monday, August 3, 2015

பிரா எனும் குறியீடு

ஹோம் அலோன் என்ற படம் என் சிறுவயதில் பார்த்தது. அதில் வரும் சிறுவனின் துடிப்பான செய்கைகளை வேடிக்கையாகச் சொல்லும் படம். சில காரணங்களால் வீட்டில் அவன் அம்மா அப்பாவால் தனியே விட்டு செல்லப்படுகிறான். அவன் வீட்டில் தனியே இருக்கும்போது தன் கற்பனை திறனை பயன்படுத்தி திருடர்களை பிடித்து பெற்றோரின், தெருவாசிகளின் நன்மதிப்பை பெறுவதுதான் கதை. அதில் ஒருகாட்சி வரும் கேம‌ரா பொறுத்திய தன் ரிமோட் காரை அடுத்த வீட்டில் செலுத்தி அங்கு வந்திருக்கும் திருடனை சிறுவன் வேவு பார்ப்பான். திருடன் ஒரு விளையாட்டு கார் ஒன்று வருவதை கண்டு அதை துரத்தி ஓடுவான். அது ஒரு இடத்தில் திரும்பும்போது டேபிளில் இருக்கும் துணிகள் அதன்மீது விழுந்துவிடும். துணிக்குவியலின் மேல் ஒரு பிரா அது இருகண்கள் போல இருக்கும். சிறுவன் ரிமோட் காரை இயக்கும்போது துணிகுவியல் மொத்தமும் மெல்ல திரும்பும். பிராவுடன் அது திரும்பவதை பார்க்க வேடிக்கையாக இருக்கும். அந்த திருடன் திரும்பும்போது அப்படியே நின்றுவிடும் துணிகுவியல். துணிக்குவியலில் ஓளிந்திருக்கும் காரை அவனால் கண்டுபிடிக்க முடியாது, சென்றுவிடுவான். ஆனால் துணிக்குவியலுடன் பிராவை காட்டும்போதெல்லாம் திரையரங்கு சிரிப்பொலியால் அதிரும்.
பதின்பருவத்து சிறுவர் சிறுமியர்களுக்கான படம் ஒன்றில் பிரா ஒன்று இத்தனை வேடிக்கை அளிப்பதை அப்போது நான் நினைத்து பார்க்கவில்லை. வேடிக்கையாக காட்டும்படியாக அது எப்படி சாத்தியமானது என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன். சிறுவனாக இருந்த போது நான் பார்த்த மற்றொரு தமிழ் சினிமாவில் தன் காதலிக்கு ஒரு பிரா வாங்கிவருவார் காதலன். அதை மறைத்து வைத்து ஒரு கோயிலில் வைத்து அவளிடம் கொடுக்க நினைப்பான். காதலி அதை பார்த்து சற்று பயந்து ஓடிப்போக அந்நேரம் அந்த கோவில் குருக்கள் அந்தப்பக்கம் வருவார். மறைக்க நினைக்கும் காதலன் பிராவை கைகளின் நடுவில் வைத்து சாமி கும்பிடுவதுபோல முருகா முருகா என்று கோபுரத்தைப் பார்த்து கைகளை தேய்ப்பார். குருக்கள் திகைத்து நிற்க காதலி தூரத்தில் நின்று வெற்றி சிரிப்பு சிரித்துக் கொண்டிருப்பார், திரையங்கு இப்போதும் சிரிப்பொலியில் அதிர்ந்தது.


சாதாரணமாக இது வேடிக்கை/காமெடி காட்சியாகத்தான் தோன்றுகிறது. அதன் பின்னால் இருக்கும் உள‌வியலை எப்படி புரிந்துக் கொள்வது? தமிழ் சமூகத்தில் பொது இடத்தில் பிராவை எடுத்து வருவது தவறு, ஆண்கள் பிராவை பார்த்து பதைக்கிறார்கள், ஆண்களின் பதைப்பு பெண்களுக்கு குதூகல‌மாக இருக்கிறது, இப்படி நிறைய சொல்லலாமா? பொதுவில் பெண்கள் தங்கள் பிரா போன்ற உள்ளாடைகள் வெளியே தெரிவதை சங்கடத்துடன் தான் மறைக்க நினைக்கிறார்கள்.உண்மையில் அது கொண்டாட்டமாகத்தான் பார்க்கப்படுகிறது. வேறு எந்த உடையோ அல்லது உள்ளாடையோ இத்தனை கொண்டாட்டமாக பார்க்கப்படுவதை நான் நினைத்துப் பார்க்கமுடியுமா தெரியவில்லை.
பெண்கள் அணியும் எந்த உடையுமே அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும். ஜீன்ஸ் அணிந்தாலும் பாவாடை தாவணி அணிந்தாலும், சுடிதார் அணிந்தாலும் ஒவ்வொருவர் ஒன்றை சொல்லாமல் இருக்க மாட்டார்கள் என்பதை பல சமயங்களில் காணமுடியும். ஆனால் பிராவை மட்டும் பிரத்தியேகமாக அதிகம் விமர்ச்சிக்கபடுவதாக நான் நினைக்கிறேன்.
பிராவால் கவரப்படுவது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான். பொதுஇடத்தில் பிரா காணும்போது ஆண்கள் ஏன் இத்தனை எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. பிரா அது தாங்கி நிற்கும் மார்பைதான் பார்க்கிறார்கள். குழந்தையாக இருக்கும்போது பாலுக்காக தோன்று ஆவல் வளர்ந்தபின்னும் அதன் மீது தீராத ஆசையை கொண்டுவருகிறது. ஏன் ஆண்கள் மட்டும் இந்த அளவிற்கு மார்பின் மீது ஆவல் கொள்கிறார்கள் என்பதை பல்லாயிரம் கட்டுரைகள் இதுவரை பல்வேறு விளக்கங்களுடன் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டுவிட்டன‌.
இப்போது பயன்பாட்டில் இருக்கும் பிரா வகையை 1914 கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது. அன்றுமுதல் இன்றுவரை கவர்ச்சியை அதிகப்படுத்தும் விதமாக அளவும் குறைந்தும், வடிவை அதிகப்படுத்தியும் புதிதுபுதிதாக வந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன்மீதான ஆவலும் கவர்ச்சியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மறைக்கப்படவேண்டிய ஒரு பொருள் வெளியே தெரிவது எப்படி என்று ஒருவித‌ நக்கலாகத்தான் அதை நோக்குகிறோம்.
வேறு எந்த உடைக்கும் அளிக்காத முக்கியத்துவதை பிராவிற்கு அளிக்கும்போது அது முக்கியமான ஒரு பொருளாக ஆண்களாலும் பெண்களாலும் பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் பிரா அணிவது பெண்களால கைவிடப்படலாம். ஆனால் அதன் மீதான கவர்ச்சி நிச்சயம் குறையாது. 

No comments: