குழந்தைகள் சீருடையில் பள்ளிக்கு செல்வதே அழகுதான். பள்ளி
திறந்ததும் சீருடையணிந்த சிறுவனை இடுப்பில் வைத்து தூக்கிச் செல்லும் அம்மாவும், வண்டியின் முன்னால் குழந்தையை வைத்து ஓட்டிச்செல்லும் அப்பாவை காண்பதே
இனிமையாக இருக்கிறது. எல்லா குழந்தைகளும் ஆரம்பத்தில் பள்ளிக்கு செல்ல பிரியப்படுவதில்லை.
முதல்நாள் நிச்சயம் அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அப்படி செய்யாத குழந்தைகள் இல்லை என்று சொல்லலாம். அவர்களுக்கு தெரியாமல் விட்டுவிட்டு
வந்தாலும் அம்மா/அப்பாவை காணாமல் அழுவது நடந்துதான் இருக்கிறது. பிரிந்துவரும்போது பெற்றோருக்கு
சங்கடமாக இருக்கும், குழந்தை
என்ன செய்கிறதோ என்கிற பதபதைப்பு நாள்முழுவதும் இருந்துகொண்டிருக்கும்.
குழந்தை முதன்முதலில் அம்மாவை/அப்பாவை பிரிகிறது. ஒரு இரண்டு
அல்லது மூன்று மணிநேரம் பெற்றோரை பிரிந்திருக்க அதற்கு இன்னும் பழக்கப்படவில்லை. மெல்லச்
சொல்லித்தான் புரியவைக்க வேண்டும்.
ஒரு பெண் குழந்தையை சைக்கிள் கேரியரில் கட்டிவைத்து பள்ளிக்கு
தள்ளிச் செல்லும் புகைப்படத்தை கொஞ்ச நாள் முன்பு பத்திரிக்கைகளில் வெளியாகியிருந்தது.
அப்பா இந்த அளவிற்கு கொடுமை செய்ய எப்படி மனது வந்தது என்று எல்லோரும் கேட்டிருந்தார்கள்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமுடியாமல் போய்விடுவதை
பெற்றோர்கள் கவனித்து வருவதினால் வந்த விளைவு இது.
ஆனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதே அது குறித்த
இனிய பேச்சுகளாக அவர்களிடம் பேசவேண்டும் என நினைக்கிறேன். பொதுவாக நம் பெற்றோர்கள் அப்படி செய்வதில்லை.
'இரு மிஸுக்கிட்ட சொல்லி உன்னய
அடிக்கச் சொல்றேன். பள்ளிகூடத்துல உன்னய அடிச்சி
உப்புகண்டம் போட்டாதான் சரியாவ' போன்ற வார்த்தைகளை
கேட்கும்போது அந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்ல விரும்புமா என்ன? குழந்தைகளை பெரிய மனிதர்கள் போன்று நினைத்து
அவர்கள் மனதில் இருக்கும் பயங்களைப் பயன்படுத்தி அவர்களை மிரட்ட எப்போதும் பெற்றோர்கள்
தயாராக இருப்பதை எங்கும் கவனிக்கலாம். இந்த மாதிரியான பயங்கள் அவர்களை மேலும் பள்ளியிலிருந்து தூர விலக்கும்
என்ற சாதாரண அறிவுகூட பெற்றோர்களுக்கு இருப்பதில்லை என்பதுதான் ஆச்சரியம்.
நல்ல மனநிலையில் அவர்களை அழைத்துச் செல்லும்போதுதான் அவர்களும்
பள்ளியில் ஆசிரியை சொல்வதை கேட்கவும் செய்வார்கள். நான் என் மகனுக்கு ஒவ்வொரு நாளும்
காலை எழுந்ததும்,
பள்ளியைப் பற்றி நேர்மறையான விஷயங்களை பேசுவதுண்டு. இது அவர்களுக்கு பள்ளி என்கிற இடம் பற்றிய ஒரு நல்ல மனநிலையை உருவாக்கும்.
பள்ளி ஒரு பயம்காட்டக்கூடிய இடம் அல்ல என்று அவர்கள் நினைக்கும்வரை
இதைத் தொடரவேண்டும். என்றாவது குழந்தை பள்ளி செல்ல மறுத்தால், 5 நிமிடம் அவர்களை வீட்டிலிருந்து வெளியே
அழைத்துச் செல்லவேண்டும். சிறிது நேரம் பல்வேறு விஷயங்களைப் பேசியபின் மீண்டும் வீட்டிற்கு
அழைத்து
வந்ததும் எப்போது
போல அவர்கள் பள்ளிக்கு கிளம்ப தயாராகிவிடுவார்கள்.
தடதடவென அடித்து எழுப்பி குளிப்பாட்டி பாலை திணித்து பள்ளிக்கு
அப்படியே கொண்டுவிடப்படுவது கண்டிக்கதக்கது. மிக நிதானமாக அவர்களுக்கு நல்வார்தைகளைச்
சொல்லி அவர்களின் விருப்பதினூடே பல்துலக்கி, குளிப்பாட்டி, முடிந்தால்
உணவு கொடுத்து குழந்தையை கையாளும் மென்மையுடன் தான் அழைத்துச் செல்வது சிறந்தது. நான்
என் மகனை தூக்கதிலிருந்து எழுப்பும்போதே கதைகளை/விளையாட்டுகளைச் சொல்லி அவனை குதூகளிக்க
முயற்சிப்பேன். தூக்கம்போன அந்த எரிச்சலை வெல்ல அதுதான் சிறந்ததும்கூட.
இதெல்லாம் என்னால் முடியாது, நேரமும் இல்லை பொறுமையும் இல்லை என்று
சொல்லும் பெற்றோர்களுக்கு நான் சொல்லவிரும்புவது உங்கள் பாஸை (உயரதிகாரி) எப்படி அனுசரிக்கிறீர்கள்.
அவர் திட்டும்போதோ, சரியில்லை
எனும்போதோ நீங்கள் எப்படி பொறுமையை கைகொள்கிறீர்கள், அதில் ஒரு 10% உங்கள் குழந்தைக்கு காட்ட முடியாது என்பதை எப்படி ஏற்கமுடியும்.
மற்றொன்று குழந்தையின் முன்னால் அவர்கள் மிஸ்ஸைப் பற்றி
கிண்டல் அடிப்பது. இதை முற்றிலும் தவிக்க வேண்டும். மிஸ்ஸைப் பற்றி நாம் கூறும் எதிர்மறையான
செய்திகள் குழந்தைகளுக்கு அவர்கள் மேல் தப்பான எண்ணத்தை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து
விலகியிருக்க கற்றுக்கொள்கின்றன. பின் மிஸ் சொல்லும் எந்த விஷயமும் குழந்தைகளுக்கு
பிடிக்காமல் போய்விடும். கற்றுக்கொள்ளும் மனநிலையும் போய்விடும்.
குழந்தைக்கு பள்ளி ஒரு சம்பிரதாயமான இடமாக நினைக்காமல் அவர்கள்
விரும்பும் ஒரு இடமாக அவர்கள் மனதில் உருவகிக்க இடம் கொடுத்தாலே போதும் குழந்தைகள்
தானா மற்றவைகளை செய்துவிடுவார்கள்.
No comments:
Post a Comment