Tuesday, May 19, 2015

அரசு அதிகாரி

ஒரு அரசு அதிகாரியை எப்போதாவது ஒருமுறையாவது சந்திக்காமல் ஒருவரால் இருக்கமுடியாது. எந்த சூழலில் நாம் சந்திப்போம் என்று தெரியாது, யதேச்சைசயாகவோ அல்லது திடீரென நடக்கும் சந்திப்புகளும் நம்மை அதிர்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் அளிக்ககூடியவைகள்படுத்தக்கூடியது. நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றபோது அங்கு ஒரு அப்படி ஒருவரை சந்திக்க நேரலாம், அல்லது வண்டியில் ஹெல்மெட் இல்லாமல், அல்லது ராங் சைடில் வந்து மாட்டிக்கொள்ளும்போது டிராபிக் போலீஸ்காரரிடம் சிக்கி கொள்ளலாம். இதெல்லாம் தெரியாமல் நடப்பது. ஈபி பில் கட்ட செல்லும்போது, பஸ்டிக்கெட் பதிவு செய்யும்போது, கெசடட் ஆபீசரிடம் கையெழுத்து வாங்க செல்லும்போது, அல்ல‌து அரசு அலுவலகவேலையாக செல்லும்போது என்று பல சமயங்களில் நாம் அரசு அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.
நிஜமாகச் சொல்லுங்கள் எல்லோருக்கும் அச்சந்திப்புகள் இயல்பாக, நட்பாக அல்லது நல்ல மனநிலையோடு வெளியே வந்திருக்கிறீர்களா? நான் கல்லூரியில் படித்தபோது ஒரு கெசட்டட் ஆபீசரிடம் கையெழுத்து வாங்க செல்ல வேண்டியிருந்தது. ஒரு அரசு தேர்வுக்கு விண்ணப்பம் அனுப்ப நாளை கடைசிநாள் இன்றுதான் அனுப்பவேண்டியிருந்தது இரவு யாரிடமாவது கையெழுத்து வாங்கி ரெயில்வே தபால் அலுவலகம் மூலம் அனுப்ப முடியும் என என் ந‌ண்பர்தான் வற்புறுத்தினார். ஆகவே அருக்கு தெரிந்த ஒரு அரசு அதிகாரி வீட்டிற்கு 7 மணிவாக்கில் கையில் அனைத்து பேப்பர்களுடன் சென்றோம்
.
இன்று ஒருவர் அப்படி பேசியிருந்தால் திருப்பி திட்டியிருக்கலாம். ஆனால் நண்பரும் நானும் அந்த சூழலில் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தாம். இந்த நேரத்தில் ஏன் வருகிறீர்கள் என்று சகட்டுமேனிக்கு திட்டஆரம்பித்துவிட்டார். அப்படி செய்வது குற்றமாகவே கருதமுடியும். ஆனால் பேசாமல் வாங்கி கொண்டே வந்தோம்.
வேறு ஒரு நண்பரின் அவரின் அலுவலக வேலை விஷயமாக ஒரு அதிகாரியை காண நானும் அவரும் சென்றோம். அந்த மாதிரியான அதிகாரிகளை அய்யா என்றுதான் விளிக்கவேண்டும். அதை பியூன்கள் முதலிலேயே அய்யா வராரு எந்திரிச்சு நில்லுங்க என்றோ, அய்யா வராரு வழிவிடுங்க என்றோ சொல்லிவைப்பார். நம்மை அழைத்தும் நம் உள்ளே செல்லும்போது பவ்யமாக செல்லவேண்டும். அவர் எதாவது சொல்லும்போது வேகமாக தலையாட்டவேண்டும். அய்யா நீங்க மனசு வெச்சா முடியும் என்ற வார்த்தை இல்லை என்றால் அந்த வேலை நட‌க்காது. கண்களை சுருக்கி தலையை கிடைமட்டமாக வைத்துதான் நம்மை பார்ப்பார். அந்த சின்ன இடைவெளியில் நான் எப்படி தெரிகிறோம் என்று கேட்ககூடாது. சற்று அதிகமாகவோ, அவர்கள் கூறும் அவமதிப்பாகவே பேசிவிட்டால் அந்த காரியம் அதன்பின் ந‌டக்கவே நடக்காது.
டிராபிக் போலீஸ் உயரதிகாரியிடமும் இப்படிதான் நட‌ந்துக் கொள்ளவேண்டும். தவறாகவந்து மாட்டிக்கொண்டால் எதுவும் பேசாமல் அய்யா பெரியமனசு பண்ணுங்க என்று சொல்லவேண்டும். எல்லா பேப்பர்களும் இருந்தாலும் பர்ஸை திறந்து கொஞ்சம் பணத்தை காட்டிவிடவேண்டும். மாறாக தீவிரமான கண்களோடு அவரை பார்ப்பதோ அல்லது அவரை கண்டுக்காமல் தலைகோதுவதோ செய்தால் செத்தீர்கள். எத்தனை வசைகள் உண்டோ அத்தனையும் சொல்லுவார். (ரத்தகொதிப்பு அவருக்கு இருக்காதா?) உங்கள் வண்டியை மீண்டும் எடுக்கவே முடியாதமாதிரி செய்ய அவரால் முடியும். மாறாக ஒரு அரசியல்வாதியின் நண்பராக இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எவ்வளவு பெரிய ஆளோ அந்த அளவிற்கு அவரை நாம் அவமதிக்கலாம். கண்டுகொள்ளமாட்டார். அந்த அரசியல்வாதிக்கு போனை போட்டு அவரிடம் கொடுத்துவிட்டால் கண்களில் பவ்யம் தெரிய அனுப்பிவைப்பார்.
ஈபியில் ஒரு முறை பெயர் மாற்ற செய்ய வேண்டியிருந்தது. நேராக நாம் சென்றால், மடிப்பாக்கதில் ஒரு ஏஒ இருக்கிறார் அவரிடம் கையெழுத்து வாங்கிவாங்க என்பார். அதுமுடிந்தால் செங்கரம்பாக்கதிற்கு சென்று நோ அப்ஜக்சன் சான்றிதல் வாங்கிவாங்க என்பார். நீங்கள் அங்கே சென்றால் அதெல்லாம் அங்கேயே கேளுங்க என்பார். மீண்டும் வந்தால் மீண்டும் அங்கேயே அனுப்புவார். அதெல்லாம் முடித்துவந்தால் வீட்டிற்கு ஆள்வரும் என்பார். அதுவும் முடிந்தால் டேபிளில் 50 ரூபாய் வெச்சுட்டு போங்க என்பார். இவ்வளவு வேலை பார்த்திருக்கோம்ல என்பார். வாங்கியது ஒரு இளிப்பு இளிப்பார் பாருங்கள். ஆனால் இதைவிட சுலபமானது 1000/500 அவர் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டால் நாளைக்கு வாங்க ரெடியாக இருக்கும் என்பார். அது எப்படி என்று நமக்கு புரியவேபுரியாது
ஒரு முறை அரசு மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. கையில் குழந்தையோடு சென்றிருந்தோம். அதற்கு முதல் நாள் போலியோ சொட்டு மருந்து தினம். ஒவ்வொரு ஆண்டும் கொடுப்பது வழக்கம்தான், அந்தமுறை வெளியூர் சென்றுவிட்டதால் கொடுக்கமுடியவில்லை.
நேற்று போலியோ கொடுத்தீர்களா என்றார் டாக்டர் இல்லை என்றதும் பக்கதில் இருந்த நர்ஸை கொடுக்க சொன்னார். அடுத்த நாள் கொடுப்பது வழக்கம் இல்லை என்றாலும், கொடுக்க வந்த நர்ஸ் வாய்கிட்ட வந்த கையுடன் சட்டென திரும்பி ஏன் நேத்தே கொடுக்கல என்றார். வெளியூர்ல இருந்தோம் என்று கூறியும், நேற்று கொடுக்கணும்னு தெரியாதா, என்று என்னையே கவனித்துக்கொண்டிருந்தார். நாளைந்து செகண்டுக்குபின்னே வாயில் சொட்டுகளை விட்டுசென்றார். அவர் சொல்ல விரும்புவது இதுதான். நான் அரசு பணியாளர் எனக்கு நீ சற்று பயந்தே ஆகவேண்டும்.
ஒரு தெருவில் எத்தனையோ பேர் இருந்தாலும் ஒரு அரசு அதிகாரியாக இருந்தால் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். தெருவில் முகவரி கேட்டு நுழைபவருக்கு உடனே சொல்லிவிடுவார்கள் தெருவாசிகள். அரசு ஊழியரை தெரிந்து வைத்திருப்பது அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்வது மாதிரி, அரசு ஊழியரை பகைத்துக்கொள்வது அரசையே பகைத்துக் கொள்வதற்கு சமம்.

ரேஷன் கடையில் சின்ன வேலையில் இருந்தாலும் அவரை பகைத்துக்கொள்வது முட்டாள்களின் வேலையாக எண்ணப்படும். அவர் போனபின் என்ன மாதிரியாகவும் திட்டிக்கொள்ளலாம் அதுகுறித்து அவருக்கு தெரிந்துஇருந்தும் அவர் கவலைப்படபோவதில்லை. அவர் வரும்போது அல்லது அவரிடம் நாம் போகும்போது பணிவை, அடக்கத்தை எதிர்ப்பார்ப்பார். இந்த உலகத்தில் மிக முக்கியமான பல விஷயங்கள் இருக்கின்றன என்று அவர் எப்போதும் கவலைப்பட போவதில்லை என்பதால் 'தைரியாமாக' நாம் அவர் முன் சென்றுவிடமுடியும்.

No comments: