Saturday, July 8, 2017

இலக்கியமும் மேடைப்பேச்சும்




எண்பது வயதாகும் என் தமிழ் ஆசிரியர் அவரின் இளமை காலத்தில் பட்டிமன்றங்களுக்கு அழைக்கப்படுவதும் அங்கே அறிவார்ந்த மக்கள் கூட்டம் குழுமியிருந்து கேட்டு ரசித்ததையும் பலமுறை கூறியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த அனைத்து பொருளிலும் பட்டிமன்றங்கள் இருக்கும் என்றார். தொலைக்காட்சி இல்லாத காலம், ரேடியோ எல்லா இடங்களிலும் பரவாத காலம் சைக்கிள்களில் பயணம் செய்து மனிதர்கள் தங்கள் இலக்கிய அறிவையும் படைப்பாற்றலை வளர்ந்துக்கொண்ட நேரம். பின்னால் திக கட்சி வேறுன்றியதும் அதன் முகம் மாறத் தொடங்கியிருக்கிறது. இன்றைய கேளிக்கை வடிவத்தை வந்தடைந்துவிட்டது. பட்டிமன்றங்கள் வெறும் மேடை முழக்கங்களாக உருவாகிவிட்டன.



இன்று மேடைப்பேச்சுகள் திட்டமிட்டு சுவாரஸ்யத்திற்காக உருவாக்கப்படுகின்றன. தொலைக்காட்சியிலும் சிரிப்பு மழையில் நனைந்ததுபோக மீண்டும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் வாரக் கடைசி நாட்களில் டிவி தொடர் இல்லா சமயத்தில் ஒரு பொதுமண்டபத்திற்கு வந்து சிரித்துவிட்டு போகிறார்கள் என நினைக்கிறேன்.

தஞ்சையில் இளங்கோவடிகள் பற்றி தமிழை துறக்காத துறவி என்கிற தலைப்பில் தினமணி ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம். பேசியவர் வைரமுத்து. மிக காத்திரமான ஒரு பேச்சாக, கட்டுரையாக இருக்கும் என நினைத்திருந்தேன். எப்போது போன்ற ஒரு பேச்சுபோல ஒரு சாதாரண பிஎச்டி மாணவர் இந்த அளவிற்குதான் பேசியிருப்பார் என நினைக்குமளவிற்கு இருந்தது. மூன்று மாதமாக இதற்காக உழைத்து ஒரு நீண்ட கட்டுரையை தயாரித்ததாக கூறியிருந்தார்.

ஒருவகையில் ஆச்சரியம் ஏற்படவில்லைதான். திக, திமுக கட்சிகள் அதன் பேச்சாளர்கள் இப்படிதான் பேசி மக்களை ஒருவித மகிழ்ச்சியில் வைத்திருக்க நினைப்பவர்கள். தஞ்சையின் எல்லா தரப்பு மக்களுடன் மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

பலவண்ண விளக்குகள், குளிரூட்டப்பட்ட பல்கணிகளைக் கொண்ட பெரிய மண்டபம் எல்லாம் இருக்க மக்கள் அமைதியாக கேட்டது ஆச்சரியம். கைதட்டல்கள்தான் அதிகம். ஒவ்வொரு சொல்லுக்கும் கைதட்டல்கள் உறுதியாக இருந்தது. மக்கள் உற்சாகம் இழக்கும் சமயத்தில் அவரே ஒரு மாதிரி கைதட்டி வார்த்தைகளை அழுத்திக்கூறி கைதட்டல்களை பெற்றுக்கொண்டார்.

சினிமா என்கிற ஊடகம் நம்மை அந்த இடத்தில் அமர்த்திப் பார்க்கிறது போலும். இதைவிட பலகாலமாக சேகரிக்கப்பட பன்மடங்கு நுண்ணிய தகவல்களையும், வாழ்க்கையின் ஓட்டத்தோடு படைப்பாற்றலில் வெளிப்படும் அனுமானங்களையும் கேட்டிருக்கிறேன். அப்போது அவர்களின் கண்களில் தெரியும் சொல்லுவதினாலேயே பெருமை கொள்ளும் கட்டற்ற அன்பில் திளைத்திருக்கிறேன். கைதட்டல்களையும், நினைவுப் பரிசுகளையும் எதிர்பாராத உடன்பயணித்த தோழமையின் அன்பே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
இலக்கியத்தை உணரும் தருணம் ஒன்று உண்டு. அது வெறும் பேச்சுகளால் மட்டும் நிறைவதல்ல. ஆடம்பர ஆரவாரமற்ற ஆர்பரிப்பும், கலங்கமற்ற மண்டியிடலில் மட்டுமே நிகழும்.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களின் மதிப்பீடு நடுநிலையோடு இருந்ததை அறிந்தேன். யதார்த்தத்தை உணர்த்தியது.