தொலைக்காட்சியில் பார்த்தேனா சினிமாவில் பார்த்தேனா நினைவில்லை.
ஒரு காட்சி மட்டும் நினைவிருக்கிறது. திருமணம் செய்த ஒருவரை விட்டு கொஞ்சம் கட்டுமஸ்தானாக
இருக்கும் ஒரு கூடைப்பந்து வீரரை பிடித்துப்போய் மறுமணம் செய்து கொள்வாள் நாயகி. கொஞ்ச
நாள் கழித்து அவர்களை காணவரும் முதல் கணவன் அவர்களின் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைவார்.
இரண்டாவது கணவர் கால்களை இழந்திருப்பார். வறுமை தாண்டவாகிறது வீடு. சாப்பாட்டிற்கே
வழியில்லாமல் இருப்பார்கள். கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு செல்வார். கதை என்னவாக இருந்துவிட்டுபோகட்டும்.
எனக்கு அந்த வயதில் அதிர்ச்சியாக இருந்தது எப்படி ஒரு பெண் இரண்டாவது செய்துகொள்ளலாம்
என்றுதான்.
அதுவரை ஆண்கள்தான் ஒரிரண்டு பேர் அதுவும் மிக அரிதாக மனைவி
இறந்தபின்னால் குழந்தையை வளர்க்க வேறு வழியில்லாமல் அப்படி மறுமணம் செய்திருந்தார்கள். ஒரு பெண் கணவன் இறந்தாலும் திருமணம்
செய்வதில்லை. அப்படி கணவன் உயிருடன் இருக்கும்போது எப்படி மறுமணம் செய்வார் என்று நினைத்தேன்.
அதே வேளையில் இது சினிமாவில் ஒரு புரட்சிக்காக அப்படி எடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
நிஜவாழ்க்கையில் எங்கும் பார்த்ததில்லையே. இன்று அப்படி இருவரும் மறுமணம் செய்துக் கொள்வதை வரவேற்கிறேன்.
உண்மையை சொல்வதென்றால் மறுமணங்களை நிஜவாழ்க்கையில் அரிதாகத்தான் காண்கிறோம். யாரோ ஒரு
எங்கோ நடந்ததாக இருக்கிறது. நேரில் காண்பது மிகக்குறைவுதான். இன்று பல விவாகரத்துகள்
நடந்து மறுமணம் செய்து கொள்வது அதிகரித்திருக்கிறது என்றாலும்கூட.