Showing posts with label காடு. Show all posts
Showing posts with label காடு. Show all posts

Friday, October 11, 2019

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் - காடு விமர்சனம்



குட்டப்பனின் வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற ஆசை கொண்டதனாலேயே கிரிதரன் தன் வாழ்வை தொலைக்கிறான் என்கிற எண்ணம் வந்தபோது காலை தூக்க கனவிலிருந்து எழுந்தமர்ந்தேன். உண்மைதானா என்கிற எண்ணம் நாள் முழுவதும் தொடர்ந்தது. அப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது இஞ்சினியர் அய்யரையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். குட்டப்பனின் தெளிவு, எல்லாவற்றிற்கும் தீர்வு காணும் குணம், சோர்வேயறியாத உடல்பலம், எல்லோருக்கும் பயன்படும் அவன் சேவைகள் கண்டு வளரும் கிரி தன்னை குட்டப்பனாக நினைக்கிறான். அதுஒரு எல்லை, மற்றொரு எல்லையில் அய்யர் இருக்கிறார். அவரது இலக்கிய ரசனை, எப்போதும் அவரிடமிருக்கும் உச்சநிலை, வேலைமுடிந்ததும் இடங்கொள்ளும் வனப்பிரஸ்தம், என்று மற்றொரு எல்லையை நோக்கி செல்ல எத்தனித்துக் கொண்டேயிருக்கிறான். நீலியும், வேணியும், அவன் அம்மாவும் அவனை அலைக்கழிக்க விடுகிறார்கள். வாழ்வின் எந்தப்பக்கத்திற்கும் செல்ல அவனால் முடியவில்லை. மாறாக அவன் மாமா சதாசிவத்தின் வழிசென்று காணாமல் ஆகிறான்.

Sunday, September 29, 2019

காடு - வாசிப்பும் மறுவாசிப்பும் - கலைச்செல்வி


இருவாசிப்புகளுக்கு இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட நான்காண்டுகள். இந்த நான்காண்டுகளில் நிறைய புத்தகங்கள் வாசித்தாயிற்று. நிறைய எழுதியுமிருக்கிறேன். இடையில் நகர்ந்த காலங்களுக்குள் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள தோன்றுகிறது. பொதுவாக ஆழ்ந்த வாசிப்பு அல்லது தன்னை ஒப்புக்கொடுக்கும் வாசிப்பு நேரும்போதெல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அல்லது பின்பக்கத்திலிருக்கும் வெற்றுத்தாளில் யார் யாருக்கு உறவு, அவர்களின் பெயர்கள், பிடித்தமான அல்லது கவனம் கோரும் பக்கங்கள் குறித்த பென்சில் குறிப்புகள் போன்றவற்றறை எழுதிக் கொள்வது என் வழக்கம். (மஹ்ஷர் பெருவெளியில் ஒரு குடும்ப மரமே வரைந்திருந்தேன். பிறகுதான் பின்னட்டை பக்கம் திருப்பினேன். அவர்கள் குடும்பமரத்தை அச்சிட்டே வைத்திருந்தார்கள். ஹாஹா..) அப்படியாகதான் 2015ல் நான் காடு நாவலை வாசித்திருந்தேன். அன்று நான் குறித்து வைத்திருந்த பக்கங்களுக்கும் இன்று நான் என்னை மறந்து கதைக்குள் ஊடுருவி நின்ற சம்பவங்களுக்குமிருந்த இடைவெளி என் மாற்றத்தை காட்டி நின்றது. (கிண்டிலில் அடிக்கோடிடலாம். ஆனால் முன்னட்டை, பின்னட்டையில் பென்சில் குறிப்புகள் எழுதிக் கொள்ள முடியாதது குறைதான்.) 

Wednesday, February 4, 2015

ஜெயமோகனின் காடு


 காமத்திற்கு தேவை தனிமை. உடலும் மனமும் தனிமையில் இருக்கும்போது காமம் விழித்துக் கொள்கிறது. காமமும் காம எண்ணங்களும் தனிமையின் போதே உருக்கொள்கின்றன. காடும் ஒருவகை தனிமைதான். காட்டை ஒவ்வொரு அங்குல‌கமாக உணர்கையில் தனிமையும் அதன் விரியத்தையும் பார்த்தபடி இருப்போம்.
நான் படிக்கும்காலத்தில் என் ஊரில் இருக்கும் ஒரு ரயில் தண்டவாளத்தை தாண்டி படிப்பதற்க்காக‌ செல்லும் ஒரு ஒற்றைப் பாதையில் தாண்டி காட்டையும் அதன் தனிமையை கண்டிருக்கிறேன். அது பெரிய காடு அல்ல ஆனால் ஒவ்வொரு இடமும் மர, செடிகளின் இருப்பும் அடுத்த நாளில் காணமுடிந்ததில்லை. தினமும் மாறிக்கொண்டே இருப்பதுபோன்ற ஒரு பிரம்மை. பெரிய மரங்களையும் அவற்றின் தனிமையையும் காணும்போது அப்போது ஏற்படும் வாழ்வு குறித்த அச்சங்களை, கேள்விகளை எண்ணாமல் இருக்க முடிந்ததில்லை. அம்மரங்களின் கீழே சிவப்புநிற இதுவரை காணாத‌ பல வண்டுகள், பூச்சிகள் இருக்கும். அவைகள் எந்நேரமும் முயங்கிகழிப்பதாக தோன்றும். தினமும் அவைகளை அப்படிதான் கண்டேன். பூச்சிகள், வண்டுகள் குறைந்த மரமாக தேடி அமர்ந்துக் கொள்வேன். படிப்பதைவிட பாதிநேரம் அவைகளின் முயக்கங்களை கவனித்தபடி இருந்திருக்கிறேன். ஆம், காட்டில் தன் எதிரிகளை வெல்வது அல்லது தன்னை காப்பாற்றிக் கொள்வது, உணவுதேடுவது, தன் இனத்தைதேடி முயங்குவது இதைத் தவிர வேறு எதுவும் காணமுடியாது.