Sunday, May 3, 2020

புதுமைப்பித்தனின் பால்வண்ணம் பிள்ளை



புதுமைப்பித்தனின் சிறுகதைகளை சின்ன பேப்பரில் எழுதிவிடலாம் என்று தோன்றுமளவிற்கு சிறியவை. மிளகு சிறுத்தாலும் காரம் கொள்ளாது என்ற வகை (கடுகு முன்பே சொல்லிவிட்டோமே). சிறுகதைகள் பொதுவாக அரைமணியில் படித்துவிடவேண்டும் என ஒரு விதி உண்டு. ஆனால் புதுமைபித்தனின் கதைகள் 5 நிமிடங்கள் போதும்.

பால்வண்ணம் பிள்ளை முன்கோபி எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என நினைப்பவர், அவர் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவேன் என நினைக்கும் அப்பாவிதான். அரசு அதிகாரி என்பதனாலேயே அதிகாரத்தை பலவகைகளில் பயன்படுத்த நினைப்பவர். வெளியில் அல்லது அலுவலகத்தில் அடக்கி வைக்கப்படுபவர்கள் அல்லது அடங்குபவர்கள் வீட்டில் தங்கள் மொத்த கோபத்தையும் காட்டுபவர்களாக இருப்பார்கள். அப்படியானவர் பால்வண்ணம் பிள்ளை.

மெக்ஸிகோ எங்கே இருக்கிறது என்கிற அலுவலக சகஊழியர்களின் போட்டியுடன் வீட்டிற்கு வரும் பிள்ளை, மனைவியின் மாடு வாங்க வேண்டும் பிள்ளைகளுக்கு பால் போதவில்லை என்கிற பேச்சால் வெறுப்புறுகிறார். வருடம் ஒரு பிள்ளை பெறும் மனைவியை அதட்டி பரணைமேல் ஏறி பழைய புத்தகங்களை எடுக்க உதவி செய்ய அதட்டுவது அவருக்கு தெரிகிறது. மறு நாள் அவளிடமிருந்த பணத்தில் மாட்டை வாங்கி வருகிறாள். அடுத்த நாளிலிருந்து காபி, மோர் குடிக்க மறுக்கிறார். அடுத்த நாள் ஒரு கோணாரை அழைத்துவந்து மாட்டைப் பிடித்துப் போக சொல்கிறார். அய்யோ பாலாகுமே என்கிறாள் மனைவி, குழந்தை ஒன்று என் கன்னுகுட்டி என்கிறது. பிடிவாதத்தால் குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்.

எல்லா அதிகாரமும் இருக்கும் அவருக்கு ஒரு அதிகாரம் மட்டும் புரியவில்லை. அது இந்த அரசு. பணத்தை அளிக்கும் அரசிற்கு அடிபணிய தெரியும் அவருக்கு தன் கீழுள்ளவர்களை அனுசரிக்க முடியாமல் போகிறது?

ஆண் ஆதிக்கம் என்று சொல்லிவிடலாம் தான். 40களில் எழுதப்பட்ட இந்த கதை இன்று வரை அரசை சார்ந்தவர்கள் செய்யும் செய்கைகளை வேடிக்கையாக எடுத்துக் கொள்ள கடமைப்பட்டிருப்பதை காட்டுகிறது. இன்று அரசியல்வாதிகளுக்கு பொருந்துகிறது, அரசு காண்டிராக்டருக்கு பொருந்துகிறது. வட்டி விடுபவருக்கு பொருந்துகிறது. எந்த ஏழ்மையிலும் அதிகாரம் நம்மை வாட்டுகிறது. அப்படி சொல்வதில் இருக்கும் அதிகாரமும்.

(azhiyasudargal.wordpress.com)

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

புதுமைப்பித்தன் போற்றுதலுக்கு உரியர்