Monday, September 10, 2018

கறிச்சோறு: நிறைவேறா வேண்டுதல்கள்


கடந்த ஐம்பதாண்டுகளில் தஞ்சை வட்டாரத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு சாட்சியாக விளங்குபவர் சி.எம் முத்து என்று .முருகேசபாண்டியன் ஒரு கட்டுரையில் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார். கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது உண்மை என்றே படுகிறது. தி.ஜா. கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், குபாரா போன்றவர்கள் இசை, நடனம், போன்ற கலைகளின் உயர்குடிகளின் ரசனைக்கு ஏற்றவகையில் நாவல்கள் படைக்கப்பட்டபோது வயல்களில் மனித வாழ்க்கை, குடும்ப உறவுகளில் சிக்கல், சாதிய மனநிலை ஏற்றத்தாழ்வுகள், மிதமிஞ்சிய அன்பு, மிதமிஞ்சிய கோபதாபங்கள் என்று வாழ்வின் மிக அடித்தட்டில் இருக்கும் மக்களின் சுகதுக்கங்களை ரசனைகளின் மேல் பெரிய ஈடுபாடுமில்லாத வாழ்க்கையை பற்றி பேசுகிறார். எந்த பெரிய லட்சியங்கள், கொள்கைகள் இல்லாத மனிதர்கள் நேரடியாக மற்ற மனிதர்களை சார்ந்து வாழும் வாழ்வை, தன் இயல்பிற்கும் தன் சிந்தனைக்கும் மீறாத வாழ்வு கொடுக்கும் கரிசனத்தை எந்த கேள்விகளுமற்று எற்றுக்கொள்ளும் கதாபாத்திரங்களை படைப்பதில் கடந்த 50 ஆண்டுகளாக சலிப்பின்றி இயங்கிக் கொண்டிருக்கிறார் சி.எம்.முத்து.


நெஞ்சின் நடுவே (1982), கறிச்சோறு (1989), பொறுப்பு (2000), வேரடிமண் (2003), அப்பா என்றொரு மனிதர் (2010), மிராசு (2016) என்று ஆறுநாவல்களை எழுதியிருக்கிறார். எல்லாமே கள்ளர் சமூகத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டவைகள். இந்த நாவல்களில் இருக்கும் நம்பகத்தன்மையை அவர் கள்ளர் மரபை சேர்ந்தவர் என்கிற இடத்திலிருந்து புரிந்துக் கொள்ள முடியும்.

தஞ்சை மண்ணின் பழக்க வழக்கங்கள், திருமண உறவுமுறைகள், சாதியில் அதன் வெளியிலும் இருக்கும் ஏற்றதாழ்வுகள், பண்பாட்டு தொடர்புகள், எல்லாவற்றையும் அவரது நாவல்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசிவிடுகின்றன.

வளமையான பகுதியில் வாழும் மக்கள் வளமையற்ற பகுதியில் இருக்கும் மனிதர்களுடன் தங்கள் 'உறவுமுறைகளை' சில அனுபவங்களினால் நிறுத்தும்போது கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி ஊர் கட்டுபாடாகவே அது மாறிவிடுகிறது. சாதியின் உட்பிரிவினருக்குள் இருக்கும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. உயர்வு தாழ்வு அதில் முளைத்து வேர் கொண்டுவிடுகிறது. அதன்பின் அந்த வழக்கத்தை கடைபிடிக்க ஊர் பெரிய மனிதர்கள் தங்கள் கெளரவத்தை காக்க எந்த பாடிற்கும் தயாராகிவிடுகிறார்கள். உறவுமுறைகள் என்பது கல்யாணம், சாவு, போன்ற எல்லா பழக்கங்களிலிருந்து திருவிழா, கொடை போன்ற சம்பிரதாயங்கள் வரை அது பரவிவிடுகிறது. கிட்டதட்ட இது எல்லா சாதி சமூகங்களிலும் காணக்கூடியது.

கறிச்சோறு என்கிற அவரது நாவலில் தன் சமூகத்தில் நிலவும் இந்த பழக்கவழக்கங்களை எதார்த்தமாக சொல்லிவிடுகிறார்.

விலக்கம் செய்யப்பட்டிருக்கும் நெல்லுப்பட்டு கிராமத்திற்கு சென்று தன் மகள் கமலாவுக்கு சம்பந்தம்பேச செல்லும் முத்துக்கண்ணு விசுவராயரை அவர் பங்காளிகளான தருமையா நாட்டருக்கு கோபால் குச்சிராயருக்கும் பிடிக்கவில்லை. அதை தடுக்கும்விதமாக இருவரும் முயற்சிக்கிறார்கள். கமலாவிற்கு அதே ஊரை சேர்ந்த கள்ளர் சமூகமாக இருந்தும் வந்தாருகுடி என்று மட்டமாக பேசப்படும் சாம்பசிவம் என்பவரின் மேல் காதல் இருக்கிறது. இருவருக்கும் அப்படி ஒரு நினைப்பு இருந்தாலும் அறுத்துக்கட்டும் பழக்கம் கொண்ட சாம்பசிவம் குடும்பத்திற்கு செல்லமுடியாது என்பது கமலா அறிந்தேயிருக்கிறாள்.

கமலாவின் விருப்பதிற்கு அவள் அண்ணன் தங்கவேலு உதவி செய்ய செய்கிறான். இதனால் ஆத்திரம் கொண்ட தங்கையாவும், கோபாலும் அவனை கடத்திவிடுகிறார்கள். ஊர் திருவிழாவில் சாம்பசிவம் கிடாய் வெட்டி கறிச்சோறு ஊராருக்கு கொடுக்கும்போது, ஊராரை நோக்கி தான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் என்று கேள்விகளை கேட்கிறான் சாம்பசிவம். இதனால் ஆத்திரம் கொண்டுவிடுகின்றனர் ஊரார். அன்று இரவில் சாம்பசிவமும் கமலாவும் தப்பிக்க போகும்போது உதவியாய் இருக்கும் தங்கவேலுவின் தலையை தூண்டாடுகிறார் தருமையா நாட்டார். இதனால் ஆத்திரம் கொண்டு அவன் அப்பா நல்லுக்கண்ணு நாட்டரை வெட்ட கத்தியுடன் பாய்கிறார். ஊரில் பல தலைகள் உருளுகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் வளமையான காவிரி கரையில் சாதிய மோதல்களும் வீண் போலி கெளரவமும் எப்படி மக்களை சீரழிக்கிறது என்கிற கேள்வி எழுந்துக் கொண்டேயிருக்கிறது. கறிச்சோறு என்று கிடாய் கறியைப் பற்றி நாவல் குறிப்பிட்டாலும் மனித கறியை விரும்புகிற மனிதர்களின் ஆணவத்தை கேள்வி எழுப்புகிறது. கிடாய் வெட்டுப்பட்டு துடித்து அடங்குவதை விளக்கும் ஆசிரியர், தங்கவேலு வெட்டுப்பட்டு தலை துண்டிக்கபட்டு கிடக்கும் அவன் உடலையும் துடித்து அடங்குவதை விவரித்துக் கொண்டேசெல்கிறார்.


மனிதர்கள் கூடுமிடமான திருமணத்திலும் திருவிழாக்களிலும் தங்கள் கெளரவம் நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக எந்தளவிற்கும், அது கொலைவரைகூட இருக்கலாம், செல்லமுடிவதை நாம் எப்படி விளங்கிக் கொள்வது.

சாம்பசிவத்தை ஊரார் வெறுத்து ஒதுக்கும்போது அவன் மனம் கொள்ளும் அலைகழிப்பை அழகாக எழுதியிருக்கும் பக்கங்கள் அதிபுனைவு தருணங்கள். மற்றொன்று கமலாவின் மன அலைகழிப்புகள். அவள் தான் செய்துவிட்டது தவறோ என நினைத்து நினைத்து மருளும் இடங்கள் அனைத்து முக்கிய தருணங்களாக எழுதியிருக்கிறார்.

குறைகளாக சிலவற்றையும் சொல்லலாம். முத்துவின் எல்லா நாவல்களுமே காலம் மிக சிறியதாக இரண்டு மூன்று மாதங்களுக்கு முடியக்கூடியதாக் அமைந்துள்ளன, மிராசு நாவல் தவிர. ஒரு நாவலுக்கு இருக்கும் பன்முகதன்மையின்றி ஒரே நேர்கோட்டில் பயணிப்பதும், ஒரே இலக்குடன் முடிவதும் சற்று அயர்ச்சியாக இருக்கிறது.

மிக லாவகமாக அழகான எழுத்து நடையில் எழுதிவரும் சி.எம். முத்து அவர்கள் ஐம்பது ஆண்டுகளாக தடையின்றி தன் பணியை செய்துவருகிறார். விமர்சனங்கள், கருத்துகள், எதிர்ப்புகள் எதையும் சட்டை செய்யாமல் அவரால் எழுதமுடிகிறது. கவனம்பெறாமை அவரை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. வாசிப்பதும், தேடுவதும், எழுதுவதும் வாழ்க்கையின் பகுதிகள் தானே.

[தஞ்சை வாசகசாலை கூட்டதில் 9-9-18 அன்று பேசியவைகளின் தொகுப்பு]

3 comments:

சொ பிரபாகரன் said...

சி.எம்.முத்து பற்றி வாசகர் கூட்டத்தில் பேசியதை பதிவு செய்துள்ளீர்கள். இந்திய சமூகத்தின் அடிப்படை அலகான சாதியைக் குறித்து பேசுவதற்கும், அதையும் பெரிதும் விதண்டாவாதத்திற்குள் சிக்காமல் தமிழ்சமூகத்தில் எழுதுவதற்கு சீரிய பார்வையும் லாகவமும் இருப்பதுடன், பெரும் தைரியமும் வேண்டும். விமர்சனங்கள், கருத்துகள், எதிர்ப்புகள் எதையும் சட்டை செய்யாமல் அவரால் எழுதமுடிகிறது என்பது அவரது பலம். கவனம்பெறாமை அவரை எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்பது அவரது ஞானம் என்றாலும், சாதிய அம்சங்களைத் தொடும் நாவல்கள் மையத்தைத் தாக்குவதால், திட்டமிட்டுக் கவனம் பெறாமல் செய்யப்படுகிறது என்று நான் கருதுகிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

கறிச்சோறு குறித்த தங்களின் பார்வை, நூலினை வாசிக்கத் தூண்டுகிறது
நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கூட்டத்தில் கலந்துகொண்டதைப்போன்ற உணர்வு ஏற்பட்டது. மண்ணின் மைந்தரான இவருடைய பணிகள் அளப்பரியன. விக்கிபீடியாவில் இவரைப் பற்றிய ஒரு பதிவினை ஆரம்பித்துள்ளேன். அவரைச் சந்திக்க நேரம் அமையவில்லை. அந்த நன்னாளை எதிர்நோக்குகிறேன்.