Saturday, May 12, 2018

விஷால் ராஜா சிறுகதை - முடிவின்மையில் நிகழ்பவை


சமீபத்திய கதைகளில் அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளின் கவனிக்கதக்க கதையாக முடிவின்மையில் நிகழ்பவையை சொல்லலாம். தேர்ந்த எழுத்தாளனின் கதைபோல பிசிறில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சிக்கலான உள்முடிச்சுகளை கொண்டுள்ள இந்த கதையை விஷால்ராஜா எழுத எத்தனை நாட்கள் காத்திருந்தார் என தெரியவில்லை.
ராபின்சன் குருசோவ் போன்று பயணத்தை, ஒரு ஃபன்டசியை வெளிப்படுத்துகிற கதை. தத்துவமும் தொன்மமும் கலந்த கதையாகவும் இருக்கிறது. ஸெல்மா லாகர் லெவ் எழுதிய தேவமலர் கதைபோன்று கற்பனை அழகியலையும், மோட்ச பயணம் போன்று நீண்ட பயணத்தையும் நினைவுபடுத்துகிறது இந்தக்கதை


ஆக்னேயாவும் மித்திரனும் நகுலன் எழுதிய நாவல்களின் வரும் நகுலன் நவீனன் அல்லது பிரேம் ரமேஷ் எழுத்தில் வரும் அதீதன் போன்ற கதாபாத்திரத்தை ஒத்தவர்கள். மித்திரனின் கற்பனை ஆக்னேயா என எண்ண தோன்றுகிறது. ஆனால் இரு வேறு பாத்திரங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு உணர்ந்திருந்தாலும் அதிகம் பேசுவதில்லை. அத்தோடு லத்தின் அமேரிக்கன் கதைபோன்ற அதீத கற்பனையும், ஃப்ன்டசியையும் வெளிப்படுகிறது. இதில் சங்க இலக்கிய கூறுகளையோ அல்லது பழந்தமிழின் சில வற்றையோ சற்றுபேசியிருந்தால் அசலான தமிழ் இந்திய கதை என்றே எண்ண தோன்றியிருக்கும். தமிழில் மிககுறைவாகவே இந்தமாதிரியான கதைகள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக சொல்வதென்றால் எஸ்ரா எழுதிய 18ஆம் நூற்றாண்டில் மழை போன்ற சில கதைகளை குறிப்பிடலாம்.

முதல் கதாபாத்திரமும் எதிர் கதாபாத்திரமும் சேர்ந்து பயணிக்கிறது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தினாலும் இருவரும் வேறு நோக்கள் கொண்டு இருக்கிறார்கள். மித்ரனின் மனசாட்சிதான் ஆக்னேயா என்று நினைக்கவும் தோன்றுகிறது. ஆனால் இருவரும் நண்பர்கள், ஒருவரை கொண்டு ஒருவரை அறியமுற்படுகிறார்கள். அதிலும் மித்ரன் ஆக்னேயாவை மிக அருகாமையில் பின் தொடர்கிறார். அவரது அனுபவங்களை தன் அனுபவங்களாக நோக்கவும் செய்கிறார். நிவலன் மீன்களும், பிரகதி நிறப்பார்வைகள், மைத்ரேயின் பாத்திரவடிவம் போன்றவர்கள் தொன்மவியல் கதைகளுக்குரிய பண்புகளோடுதான் காணப்படுகிறது.

ஆக்னேயா காதலுக்காக மைத்ரேயியை தேடிவரும் பயணம் என்று ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதாக கதையை சுருக்கிகொண்டாலும் அசோகமித்திரன், ஜானகிராமன் கதைகள் போன்று ஒரே தத்துவத்தை, அனுபவத்தை சொல்லும் ஒரு கதையாக இதனை சுருக்கிக் கொள்ள முடியாது. கற்பனையை தன்னுள் உருவகித்துக் கொள்ள முடியாதவர்களால் இந்த கதையை எந்த வகையிலும் அர்த்ததை அவர்களுக்கு அளிக்க முடியாது.

ஆக்னேயாவும் மைத்ரேயியுதான் மைய பாத்திரங்கள், ஆனால் மித்திரனும் பிரகதியும் உரையாடல்கள் மூலமாகவும், ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வதின் வழியாக  ஆக்னேயாவின் தேடலை புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆக்னேயா விரும்பும் மைத்ரேயி மீதான காதல் அல்லது அன்புகூட அறம், நம்பிக்கை, நீதி, மதிப்பீடு என்று நாம் விரிவுபடுத்திக் கொள்ள முடியும். உண்மையில் இதையெல்லாம் தாண்டி கதையில் வரும்சாத்தியங்களின் இயந்திரமே’ கதையின் மையம். அதைகொண்டு சுழலும் மெர்ரிகொரவுட் இருக்கைகள் மாதிரியே கதாபாத்திரங்கள். அவர்கள் தங்களுக்குள் குறிப்பாக மித்திரன் கண்டடையும் தரிசனம் தான் முடிவின்மையின் ஒழுங்கின்மை.

என் கல்லூரி காலத்தில் 7 ரீசன்ஸ் டு பிலீவ் இன் காட் என்கிற நூலை என் ஆசிரியரின் பரிந்துரையால் வாசித்திருந்தேன். அதில் புவி 23 டிகிரியிலிருந்து சற்று விலகினால் ஏற்படும் மாற்றங்களும், புவிக்கும் நிலாவிற்கு இடைப்பட்ட தூரத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், சூரியனின் வெப்பத்தில் சின்ன மாறுதல் ஏற்பட்டாலும் பூமிக்கு என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்கிறவற்றை பேசியிருப்பார் அதன் ஆசிரியர். மிகச் சின்ன மாறுதல்கள்கூட நம் புவியை அழிப்பதற்கான சாத்தியங்களை கொண்டிருப்பவைகளை விரிவாக பேசப்பட்டிருக்கும். யோசிக்கும்போது நாம் கத்தி முனையில் நிற்பதற்கு சமான சாத்தியங்களை நாம் கொண்டிருக்கிறோமா என்கிற அச்சமும் மனதில் எழும்.

நாம் முன்பு எடுத்த முடிவுகளும் எடுக்காமல் விட்ட முடிவுகளும்தான் நாம் இப்போது இருக்கும் நிலைக்கு காரணம் என்று யாரோ சொன்ன வரிகளை நினைத்துக் கொள்கிறேன். பல்வேறு சாத்தியங்களை கொண்ட நம் வாழ்வில் ஒரு சாத்தியம் மட்டுமே நம் வாழ்வை நகர்த்துவதற்கு காரணியாக அமைந்திருக்கிறது என்கிற உண்மையை புரிந்துக் கொள்ளும் ஒரு சமயமே நம் வாழ்வின் நாம் அடையும் ஒரு முக்கிய தருணம்.

அந்த முக்கிய தருணத்தை சின்ன கோடாக கிழித்து தாண்டிச் செல்கிறது இந்த கதை.

[ஊட்டி காவிய முகாம்'18ல் பேசிய உரையின் முழுமையான எழுத்து வடிவம்.]

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வாழ்வில் அத்தகைய ஒரு தருணம் அனைவருக்கும் உரிய நேரத்தில் கிடைத்துவிடுவதில்லை என்பதே உண்மை.