Thursday, June 4, 2015

நடிகர்களும் விளம்பரமும்

நடிகர்களுக்கும் அவர்கள் நடிக்கும் விளம்பரங்களும் சம்பந்தமில்லை, அது வெறும் நடிப்புதான், அதை சீரியசாக எடுத்துக்கொள்ளகூடாது, அந்த பொருளின் அம்பாசிடர் கிடையாது என்று பலவாறு பேசப்படுவதை கேட்கிறோம். எல்லாமே ந‌ன்றாக போய்க் கொண்டிருக்கும்போது இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஒரு அசம்பாவிதமும், விளம்பரங்களுக்கு எதிரானதும் நடக்கும்போதுதான் இதை பெரிதாக விவாதிக்கவேண்டியிருக்கிறது. அதுவரை சம்பந்தப்பட்ட நடிகர்கள் கவலை கொள்ளாது பணத்தை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

சினிமா நாடகம் போன்றவைகள் நடிப்புதான். அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்தை சரியாக இயக்குனர்கள் சொல்வது மாதிரி நடித்துக் கொடுத்துவிடுகிறார்கள். சிலர் வெற்றிபெறுவதும் சிலர் அதில் தோல்வியடைவதும் நடக்கிறது. ஆனால் விளம்பரம் நடிப்பல்ல, நிஜம். நிஜமாக சொல்லப்படுகிற ஒரு விஷயத்தை நடித்து சொல்கிறார்கள். ஆகவே வரும் எல்லா விளம்பரத்திலும் அவர்கள் நடிப்பார்கள் என்று சொல்லமுடியுமா? காண்டம் விளம்பரத்திற்கு இந்த நடிகர்கள் நடிப்பார்களா? அல்லது இரவு 11 மணிக்கு மேல் அந்தரங்கம் பேசும் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வர சம்பதிப்பார்களா? என்பதையும் யோசிக்க வேண்டும்.


இமேஜ் இருக்கும் நடிக நடிகைகள் அவர்களின் பாத்திரங்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறார்கள். நிஜவாழ்வில் எப்படி இருந்தாலும் இமேஜைப் பொருத்து மிக உன்னதமானவராக தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் விளம்பரம் என்று வரும்போது அதில் அந்த விளம்பரத்தால் வரும் பின்விளைவுகளைப் ப‌ற்றி யோசிக்காமல் பணத்திற்காக மட்டுமே செய்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் தோன்று நடிக,நடிகைகள் அந்த இடத்தில் இடம் வாங்க பிரியப்படுவார்களா? ஒரு பெயர் தெரியாத ஒரு நபர் அந்த விளம்பரத்தில் தோன்றுபோது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மக்கள் ஒரு பெரிய நடிகர் தோன்றும்போது அதில் நம்பத்தன்மை வந்து விடுவதாக நினைக்கிறார்கள். அதை நடிகர்கள் கவனம் கொள்ளவேண்டும் என கேட்பது நியாயமானது என்றுதான் நினைக்கிறேன்.

பத்தடியில் தண்ணீர் வரும் என்று சொல்லும் நடிகர்கள் அதை உறுதி செய்வேண்டும் என ஏன் கேட்பதில்லை. விளம்பரம் என்பது பொய்தான் என்று அவர்களே முடிவு செய்துகொள்கிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டியிருகிறது. ஒரு விவசாயிக்கு தெரியும் இந்த இடத்தில் எவ்வளவு நீர் இருக்கிறது, தமிழகத்தின் இன்றைய நீர்நிலை என்ன என்பதைப் பற்றி எல்லாம். ஆனால் நேரடியாகவே பொய் சொல்கிறார்கள். அதை அந்த நடிகர்கள் வழிமொழியவும் செய்கிறார்கள். பின் வழக்கு என்று வரும்போது அந்த நடிகர்களை உட்படுத்துவதும் நியாயம் தானே?

நிஜவாழ்வில் மூன்று/நான்கு திருமணங்களை செய்யும் நடிக நடிகையர்கள் கூட சினிமா, நாடகங்களில் (நெடுங்தொடர்) நல்லவர்களாக, போராடுபவர்களாக, இந்த சமூகத்தின் ஆண், பெண்க‌ளின் நிலைகளைப் பிரதிபலிப்பவர்களாக நடிக்கிறார்கள். அதாவது தங்களின் இமேஜ் பாதிக்காத அளவிற்கு தங்களை வெளிப்படுத்துவதை பார்க்க முடிகிறது. ஆனால் விளம்பரம் என்று வரும்போது அந்த இமேஜ்களை மறந்து பணத்திற்காக நடிக்க செய்கிறார்கள். இதனால் பாதிப்படைவது அவர்கள் அல்லவே. காண்டம் விளம்பரத்தில் நடித்தால் பாதிப்படைவது அவர்கள் என்று அறிந்திருக்கிறார்கள். ஆனால் ரியல் எஸ்டேட், சென்னை அம்ருதா போன்ற விளம்பரங்கள், மாகி, குளிர்பாணங்கள் போன்ற விளம்பரங்களில் நடித்து அதை பயன்படுத்துவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்பதால் பொய்யான விளம்பரங்களுக்கும் நடிக்க தயாராக இருக்கிறார்கள். இது நிச்சயம் கண்டிக்க தக்கதுதான்.

No comments: