தற்கொலைப் பாதையில் தமிழ்சினிமா அதிர்ச்சி ரிப்போர்ட் என்று ஒரு கட்டுரை தினகரம் சினிமா மலரில் படிக்க நேர்ந்தது. அதன் சாராம்சம் இதுதான் சினிமா நாயகர்களின் சம்பளஉயர்வுதான் தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்துக் கொள்வதற்கு காரணம். ஒரு முதலாளி தற்கொலை செய்துகொள்வதற்கு தொழிலாளிகள் காரணமாக இருக்க முடியுமா என்ன? முதலாளிகளின்/மேலதிகாரியின் தொல்லை தாங்கமுடியாமல் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்வது அல்லது அந்த நிறுவனத்திலிருந்து விலகுவது நடக்கும்.
தமிழ் சினிமா மற்ற சினிமாக்களிலிருந்து மாறுபட்டு இருக்கிறது. தெலுகு கன்னட சினிமாக்கள் தயாரிப்பாளர்களின் கையிலும் இந்தி சினிமா பெரிய நிறுவனங்களின் கையிலும் மலையாள சினிமா இயக்குனர்களின் கையிலும் இருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா நடிகர்களின் கையில் இருக்கிறது. இதைத் தீர்மானிப்பது யார்? இதை பார்வையாளர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.
சினிமா பார்க்கும் பார்வையாளன் எதை வெற்றியடைய வைக்கிறானோ அதைப் பொருத்துதான் எதுவும் நடக்கிறது. மாராட்டி சினிமா பார்வையாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் நல்ல கதைகளும் சமூகபிரச்சனைகளை அலசும் படங்கள் வரும்போது அவைகளை விட்டுவிடுவதில்லை. தலித் கூலிதொழிலாளியின் பிரச்சனை பேசிய கோர்ட், மூன்றாம் பாலினபிரச்சனையை பேசிய ஜோத் நல்ல வரவேற்பைதான் பெற்றன. தமிழில் அப்படி படங்கள் வருகின்றனவா? வந்தால் வெற்றிப் பெற்றிருக்கிறா? மாற்று சினிமா என்ற ஒன்று தமிழில் இல்லவே இல்லை.
சாதாரணநிலையில், மிககுறைந்த ஊதியத்தில் நடிக்கும் நடிகர்களை தயாரிப்பாளர்கள் யாரும் சீண்டுவதில்லை ஏன்? ஒரு பெரிய நடிகரின் கால்சீட் கிடைத்ததும் அந்த தயாரிப்பாளர்கள் பெரிய பணக்காரர்களாக சித்தரிக்கப்படுவதும் ஏன்? சினிமா தயாரிப்பு ஒரு சூதாட்டம்போல் மாறிவிட்டதற்கு தயாரிப்பாளர்களே காரணம் என நினைக்கிறேன். சின்ன வெற்றியடைந்ததும், அடுத்தடுத்து பெரிய வெற்றிகளை எதிர்ப்பார்ப்பதும் அதற்கு தகுந்தார்போல் காய்களை நகர்த்தி படங்களை தயாரிப்பதும் நடந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டதில் வெடித்த பலூன் போல அனைத்தும் சிதறிவிடுகிறது.
பல
சதவிகித வட்டிக்கு பணம் பெறப்பட்டு தயாரிப்பாளர்கள் தயாரிக்க காத்திருக்கிறார்கள். ஒரு பெரிய நடிகரின் கால்சீட் கிடைத்துவிட்டால் எதையும் செய்யலாம் என்கிற நினைப்பு அவர்களுக்கு வந்துவிடுவதுதான். பெரிய நடிகர்கள் தங்கள் தயாரிக்கும் சின்ன பட்ஜெட் படங்களில் காமியோவா வரவைத்து காசுபார்க்க தயாரிப்பாளர்கள் ஆசைப்படுவது ஏன்?
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம், தயாரிப்பாளர்களைவிட அவர்களுக்கு வட்டிபணம் கொடுக்கும் முதலாளிகள் அதிகம் செழிப்பதிலிருந்து புரிந்துக் கொள்ளலாம் இதில் இருக்கும் சூட்சமத்தை.
மற்றொன்று கலைப்படங்கள், வணிகப்படங்கள் இரண்டும் வேறானவைகள். இவைகளை குழப்பிக்கொள்ளக் கூடாது. வணிகப்படங்களுக்கு பெரிய ரிஸ்க் எப்போதுமே உண்டு. கலைப்படங்கள் தமிழில் பார்க்க ஆளே இல்லை. சூதுகவ்வும், நடுவில கொஞ்சம் பக்கதை காணவில்லை போன்ற படங்கள்கூட முழுமையான கலை அல்லது மாற்று படவரிசையை சேர்ந்தவை அல்ல. இவற்றில் நிறைய சினிமாத் தனங்கள் நிறைய உண்டு என்பதை மற்ற மொழி மாற்றுப்படங்களை பார்க்கும்போது புரிந்துவிடும்.
கலை,மாற்று
சினிமாக்கள் வெற்றிப் பெறாதவரையும், சினிமா நாயகர்களை வைத்தே வியாபாரம் என்று பார்வையாளர்களை தமிழ் சினிமாவில் கொண்டுஇருக்கும் வரையும், தயாரிப்பாளர்களின் நிலை இப்படிதான் இருக்கும் என தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் நாயகர்கள்தான் முதலாளிகள், தயாரிப்பாளர்கள் அல்ல. முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள் யார் யாரை ஆட்டிவைப்பது என்று.
No comments:
Post a Comment