Friday, January 2, 2015

நடிகனின் நாடகம்: கமல் 60



நடிகனின் காதலின் நாடகம் ஏனடி என்கிற பாடல் என் சிறுவயதில் பார்த்தது, பின் நானும் இடையாட்டி நடித்து என் சக தோழிகளிடம் பாராட்டை பெற்றது நினைவிருக்கிறது. எங்கள் ஊரில் மிக தாமதமாகவே எல்லா படங்களும்வரும், இதையும் சராரரியாக என் ஐந்தாவது வயதில் இப்படத்தை பார்த்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் இன்று பார்த்தது மாதிரி அந்த பாடல் மட்டும் என் மனதில் இருக்கிறது.
எழுபதுகளின் கடைசியில் கமல் என்னும் நடிகர் வந்தபோது அப்போதைய நடிகர்கள் தலையில் டோப்பாவுடனும் குச்சி மீசையுடனும் நடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரிரு படங்களைத் தவிர நடிகர்கள் நடனமாடியது கிடையாது அல்லது அவர்களுக்கு தெரிந்திருக்காது. அப்படியே ஆடினாலும், நாயகி ஆட அவர்கள் ஸ்டைலாக நடந்து வருவதோ அல்லது கைகளை தூக்கி உச்சஸ்தானியில் முதல்வரியை பாடுவதோடு நின்றுவிடுவார்கள். ஆனால் கமல் அதற்குமாறாக தடித்த மீசையுடனும் உண்மையான முடியுடனும் இடைகளை அசைத்து பெண் போன்ற‌ நளின உடலசைவுகளுடன் பாடல்களில் தோன்றுவார். அதுவே அவரது அடையாளமாகவும் மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டிய ஒரு முக்கிய புள்ளியாக இருந்தது.
ஆனால் அவர் அதிலேயே எப்போதும் இருந்ததில்லை. அதாவது வெறும் நடனம் மட்டுமே கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து பல்வேறு கதாப்பாத்திரங்களின் மூலம் தன்னை புதுபித்துக் கொண்டே இருந்திருக்கிறார். இன்றும்கூட புதிய படங்களில் பிற மொழிகளில் வரும்போது அதை தமிழில் கொண்டுவர முயற்சி செய்கிறார். அத்தோடு ஒவ்வொரு காலகட்டத்திலும் புதியதாக‌ வரும் தொழில்நுட்பங்கள், காட்சியமைப்புகள், புதிய உத்திகள், என்று எல்லாவற்றையும் அவர்தான் தொடங்கிவைக்கிறார். குணா, மகாநதி படங்கள் இன்றைய காலகட்டங்களிலும் எப்போதைக்குமான‌ ஒரு புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது.


எல்லாவற்றையும் அவர் முன்பே சிந்தித்துவிடுகிறார். அல்லது சினிமா போகும் பாதையை முன்பே கணித்தது விடுகிறார். என் சிறுவயது சினிமா ஆளுமை கமல்தான். சினிமா போகும் பாதையை முன்பே கணித்தது விடுகிறார். என் சிறுவயது சினிமா ஆளுமை கமல்தான். அவர் நடனங்களையும், நடிப்பையும், ஒவ்வொரு ஃப்ரேமாக ரசித்திருக்கிறேன். இன்று அப்படி சொல்லிக் கொள்ள முடியவில்லை. சூர்யா, தனுஷ் இப்போது பிடித்திருக்கிறது. இருந்தாலும் அவர் படங்களை கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
கமல் ஒரு பெரிய அறிவுஜீவி என்கிற நல்ல‌பேர் அவருக்கு உண்டு. புத்தகங்கள் வாசிப்பதும், தொடர்ந்து உலக சினிமாவை கவனிப்பதும், அதன் தொழில்நுட்பங்களை சாதகமாக எடுத்துக்கொள்வதும், நடிப்பிற்காக தன் உடல்நிலையை வருத்தி எந்த எல்லை வரையும் செல்லக்கூடியவராக இருக்கிறார். அவர் இடத்திற்கு வர மற்றொரு நடிகரால் அத்தனை எளிதானது அல்ல என்கிற உண்மை எல்லா ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கிறது. சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்கள் அவர் இடத்திற்கு வரமுடியும் என்றாலும், கமலின் சாதனைகள் முறியடிப்பது கடினம்தான் என நினைக்கிறேன்.
கமலின் படங்கள் இன்றைய தேதியில் பெரிய வெற்றிகளை அடைவதில்லை. இருந்தாலும் தற்போதைய ரசிகர்களுக்கும் வரும் எதிர்கால ரசிகர்களுக்கும் அவரின் நடிப்பும், அதில் அவர் செலுத்தியிருக்கும் ரசனையையும் மறந்துவிடமாட்டார்கள் என நினைக்கும் அளவிற்கு இருக்கிறது.
அவருடைய படங்கள் இன்றைய காலத்திற்கானது மட்டுமல்ல. எதிர்காலத்திற்கும் தேவையான ரசனையையும், அழகுணர்ச்சியையும் அளிப்பவை. அவருடைய 60 வயதில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் சினிமாவில் இருந்திருக்கிறார். வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஒன்றுதான்.
என்பதுகளில் வந்த சில படங்களில் அவரது சேட்டைகளை இப்போது தாங்கிக் கொள்ள முடியாது. தேவையற்ற முகசுளிப்புகள், உதட்டுமுத்தங்கள், நெருக்கமான நடிப்புகள் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் எரிச்சல் அடைய வைத்திருக்கிறது (எனக்கு அப்படி தோன்றவில்லை). பல படங்கள் அவரது தலையீடால் சொதப்பியிருக்கிறது என்று சொல்லப்பட்டதுண்டு. ஆனால் வெற்றி ஒன்றே என்று எப்போதும் அவர் உழைத்ததில்லை என்பதை பல சமயங்களில் காணமுடியும். கூடவே வேறு எந்த நடிகரும் இவ்வளவு முயற்சிகளை எடுத்ததாக தெரியவில்லை.
ஒரு சம‌யத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படங்கள் வெளியான நடிகரான ஜெய்சங்கர், அந்த காலத்தில் சினிமா மோகத்தை குறைத்தவர் என்று சொல்லப்பட்டதுண்டு. அவர் ஒருமுறை கமலிடம் கேள்வி கேட்கும் ஒரு பேட்டியில் 'நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்து மெனக்கெட்டு நடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள், அப்படியே நடிக்கலாமே' என்றார். அதற்கு கமல் என்ன பதில் அளித்திருப்பார் நமக்கு தெரிந்திருக்கும், அந்த பதில் முக்கியமல்ல என நினைக்கிறேன். அந்த கேள்வியில் இருக்கும் புரிதலின்மையே முக்கியம். வெற்றிகள் இருந்தாலும் தொடர்ந்து முய‌ற்சி செய்வது என்பது கமலின் சிறப்புகளில் ஒன்று.
தொடர்ந்து தன்னை தக்கவைத்துக்கொள்ள அவர் முயற்சி செய்யவில்லை. தன்னை நிலைநிறுத்திகொள்ள முயற்சி செய்கிறார். எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என அவர் யோசிக்கவில்லை. ஆகவேதான் அவரால் தொடர்ந்து சினிமா உலகில் தனிந்து நிற்கமுடிகிறது. அந்தவகையில் மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

வாழ்த்துக்கள் கமல்.!!

No comments: