நான் கெமிஸ்ட்ரி முடித்ததும் காங்கேயம் பக்கத்தில் உள்ள
ஒரு கிராமத்தில் தவிட்டு எண்ணெய் ஆலையில் கெமிஸ்டாக வேலைக்கு சேர்ந்தேன். மிக வளமையான
கிராமம். அழகான வயல்கள், பார்க்க
கடினமானவர்களாக இருந்தாலும் மென்மையாகப் பேசும் மனிதர்கள். கோவை போகும் சாலையில் அமைந்திருந்தது
அந்த தொழிற்சாலை. மதிய ஷிப்ட்
இருக்கும் நாட்களில் காலை நேர நடைக்கு செல்வது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். ஆள்
ஆரவம் இல்லாத அந்த ஊரில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்பதுபோல் காலைக்கு எல்லோரும் வயல்
வேலைக்கு சென்றிருப்பார்கள். அமைதியும், மதிய வெய்யிலும், குளிர்ந்த காற்றும் அத்தனை
இனிமையாக இருக்கும். தொழிற்சாலைக்கு பின்னால் இருந்த சில கவுண்டர் வீடுகள் வாடகைக்கு
விட்டிருந்தார்கள். அவர்கள் கேட்ட வாடகைக்கு அந்த தொழிற்சாலையில் வேலைபார்க்கும் மக்கள்
வருவதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுன் இருந்தார்கள்.
இந்த தொழிற்சாலையால் அவர்கள் நிலங்கள் மாசுபடுகின்றன, மலடாகின்ற என்று அங்கிருக்கும் மக்களுக்கு
தெரிந்திருக்க வில்லை. அத்தோடு அதில் பணிபுரிந்தவர்களுக்கே அது பற்றி தெரிந்திருக்காது.
சுற்றியுள்ள நிலங்களில் விவசாயம் செய்யும் ஒரு நபர் வந்திருந்தார்.
அப்படி அடிக்கடி வருபவர்தான். தான் ஏர் உழும்போது இந்த தொழிற்சாலையிலிருந்து வரும்
தூசிகள் என் கண்ணை அடைக்கிறது அதனால் சரியாக உழமுடியவில்லை என்றும், அத்தோடு மாட்டிற்கு அந்த தவிட்டு தூள்
விழுந்து மாடுகளும் திணறுவதாக தெரிவித்தார். அதை ஒரு வேடிக்கையாகதான் சொல்லிக்கொண்டிருந்தார்.
நாங்களும் சிரித்துக் கொண்டிருந்தோம். அடுத்து நாள் அது பற்றி உயர் அதிகாரி ஒருவரிடம்
இதைப்பற்றி தெரிவித்தபோது அவரும் மென்மையாக சிரித்துவிட்டு கொஞ்ச நாளில் உழமுடியாது
நிலமெல்லாம் மலடாயிடும் அப்ப சொல்லமாட்டர் என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.