பூமியின் முழுமையான புகைப்படம் எடுக்கப்பட்டதும், அதுவரை காணப்படாத நிலவின் மறுபக்கம் புகைப்படமாக எடுக்கப்பட்டதும், நிலவில் மனிதன் கால் வைத்த பின்தான் நிகழ்ந்தது. அதன்பின் தான் மனிதனுக்கு தனக்கு நிகரானவன் யாருமில்லை என்கிற எண்ணம் பித்தேறியது என நினைக்கிறேன். ஏனெனில் புரியாத வானை புரிந்துக் கொண்டுவிட்டேன் என்கிற ஆணவமும், அதிகாரமும் கைக்குள் வந்ததுவிட்டதாக நினைக்க ஆரம்பித்துவிட்டான். 70களிலிருந்து இந்த ஆணவம் தொடங்கி 90களில் வளரத்தொடங்கியது. அதன்பின்னால் தொடர்ச்சியாக மனிதன் செய்யாத அட்டூழியமில்லை என்று சொல்லலாம். ப்ளாஸ்டிக்கை எல்லா இடத்திலும் பரவவிட்டது, கடல் உயிரினங்களை கொன்று கடலை ஆக்கிரமித்தது. காடுகளை முழுமையாக ஆக்கிரமித்து நகர வளர்ச்சி என்ற பெயரில் சூரையாடி, எல்லா ஜீவராசி, மரங்கள், மலைகள், ஆறு, போன்றவைகளை காலி செய்து, இயற்கையை முடிந்தளவிற்கு ஒழுங்கின்மையை கொண்டுவந்து நிறுத்தியது மனிதன் தான்.
