Wednesday, March 9, 2022

குதிரைமரம் – ஒரு நெசவு


 நவீனக் கல்வியின் பலமாக நான் எண்ணுவது அது நமக்களிக்கும் ஒரு பொதுத்தன்மையை. குறிப்பாக, எந்த ஒன்றிலுமே ஆரம்பத்திலேயே பெரும் ஈடுபாட்டோடு தன்னையறியாமல் மூழ்கிப் போவதைத் தடுக்கிறது அல்லது தவிர்க்க வைக்கிறது. இதன் விழைவுதான் அந்த பொதுத் தன்மை என்றும் எண்ணுகிறேன். ஆற்றில் செல்லும் படகு அதன் சுழிக்குள் சிக்காமல் செல்வது போலஉயர் கல்வியின் போது நம் அகத்தின் ஒத்திசைவுக்கேற்ப ஏதாவது ஒரு சுழியில் நம்மை மூழ்கடித்து அதில் நிபுணத்துவம் பெறும் முதிர்ச்சியைத் தருவது, ஆரம்பகட்ட கல்வியில் கிடைத்த அந்த பொதுத்தன்மை தான் என்று நம்புகிறேன். இந்த முதிர்ச்சி தான் , ஆற்றின் ஆழத்தில் சலனமின்றி பயணிக்கும் ஒரு பக்குவத்தைத் தருகிறது.

எழுத்தாளர் அசோக்குமாரின் இத்தொகுப்பிலுள்ள குதிரை மரம் என்ற கதையைப் படித்த பிறகு எழுந்த கனத்த மௌனத்தை எப்படியாவது கடப்பதற்காக என்னுடைய தர்க்க மனத்தில் இருந்து எழுந்ததுதான் இப்பதிவின் முதல் பத்தியிலுள்ள வார்த்தைகள். இருந்தாலும், நெசவையே தன் அகமாகக் கொண்ட கதைநாயகன் பிரபுராமின் படைப்புத் தன்மைக்கு முன் எந்த தர்க்கச் சொல்லும் வலிமையற்றுத் தான் போகிறது. அந்த படைப்பு மனத்தின் நுண்ணுணர்வு அப்படி என்று எண்ணத் தோன்றுகிறது.

குடும்ப வறுமையை தன்னுடைய நெசவுத் திறமை போக்க முடியவில்லை என்ற ஆற்றாமையில் பிரபுராம் அலைக்கழிக்கப்படும் சித்திரம் வெகு ஆழமாக இக்கதையில் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. எங்கே தன் அகத்தோடு இயல்பாக ஒத்திசைந்த நெசவுத் திறனிலிருந்து மடைமாற்றப் பட்டு விடுவேனோ என்ற பரிதவிப்பில், பிற வேலைகளின் மேல் அவன் கொள்ளும் ஒவ்வாமை அத்தொழில் மற்றும் அதில் ஈடுபடுபவர்களின் மேல் கசப்பாக, வெறுப்பாக உருமாறி கதை நெடுகிலும் வெளிப்படுகிறது. சுற்றுப்புறத்தை முற்றிலுமாக தவிர்க்க விரும்பும் பிரபுராமின் செயல்கள், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்டவருக்கான முதிர்ச்சியாகத் தெரியாவிட்டாலும், இது படைப்பு மனத்திற்கே சொந்தமான ஒரு உள்ளொடுங்கும் செருக்கு என்பதை மிக நுட்பமாக விவரிக்கிறது இக்கதை. புறத்திலிருந்து எழும் ஒரு சின்ன சீண்டல், மீண்டெழுந்த பிரபுராமை மீண்டும் கலைத்துப் போடும்போது இந்த செருக்கு இப்படி ஏதாவது நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக பிரபுராம் வலிந்து செய்து கொண்ட ஒரு பாவனைதானோ என்றும் எண்ண வைக்கிறது. படைப்பு மனங்களை நாம் அவ்வளவு எளிதாக நம் தர்க்க அறிவால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

நெசவு பற்றி தெரிந்தவர்களுக்கு இக்கதையின் சித்தரிப்புக்கள் ஒரு Visual Treatஆக இருக்க முடியும். அத்தனை வண்ணங்கள். இத்தொகுப்பில் இக்கதைக்கு முன் உள்ள ஓசைகள் என்ற கதையைப் படித்த பின்பு எழுந்த மெல்லுணர்வை அல்லது feel good தன்மையை குதிரை மரம் சற்றுக் கலைத்துத் தான் போட்டு விட்டது.

https://muthusitharal.com/2022/02/26/%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81/

https://www.jeyamohan.in/162733/

No comments: