Friday, May 1, 2020

குலதெய்வத்தின் மொழி: பேய்ச்சி - ம.நவீன்



ஒரு குடும்பம் உருக்கொள்வதற்கும் ஒரு சமூகம் உருவெடுக்கவும் பெண்ணின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒரு இனக்குழு தன்னை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்கு பெண்களின் பங்கு தேவையாக இருக்கிறது. கூடவே அதற்கு ஒரு கட்டமைப்பு தேவையாகவும் இருக்கிறது. அதன்மூலம் எழுதாத சட்டங்களாக சில நடைமுறைகளை மேற்கொள்கிறார்கள். அவை மீறமுடியாத அறமாக பாவிக்கிறார்கள். அதற்கு ஒரு தலைவன்/தலைவி உருவாகி அவர்கள் கடவுளர்களாக உருக்கொள்கிறார்கள்.

ஆண் கடவுளர்கள் இருந்தாலும், பெண் வழிபாடுகளின் வழியே நிலைநிறுத்தபடும் அறங்கள் மீறப்படுவதில்லை. தாய் என்னும் உருவகம் எல்லா உயிரிகளையும் எளிதில் கட்டிப்போடுகிறது. காட்டேரி, காளி, அம்மன், போன்ற கடவுளர்களின் கட்டுப்பாடுகள் அச்சமூகத்தின் நீர்த்துப்போதலிலிருந்து தடுத்து, ஒரு எல்லைக்குள் தங்களை ஒருங்கிணைப்பதில் முடிகிறது. வரலாற்றில் அச்சமூகம் பல்வேறு மாற்றங்களை அடைந்தால் கூட கடவுளர்களின் மீதான நம்பிக்கையும், அச்சமும் குறைவதில்லை.

இடம்பெயர்ந்துக் கொண்டிருக்கும் ஒரு இனக்குழவில் அவர்களை வழிநடத்துவது இக்கடவுளர்கள் மீதான நம்பிக்கை அதிகம் இருக்கிறது. தமிழகத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு பல காரணங்கள் இருந்தன. பஞ்சம், போர், வறுமை போன்ற காரணங்களால் கூடிவாழும் பண்புடைய தமிழினம் பல தேசங்களுக்கு பரவியது. கிழக்கே பிஜி தீவிலிருந்து மேற்கே கரீபியன் தீவுகள் வரை பரவியிருக்கிறார்கள். கடல்கடந்து மலேசியாவில் ரப்பர் தோட்டத்திற்கு சென்றது போன நூற்றாண்டுதான்.

மலேயா பகுதியின் தோட்டங்களில் வேலைக்கு செல்லும் தமிழகத்திலிருந்து செல்லும் சின்ன குழு அவர்களுடன் ஒரு காவல் தெய்வத்தையும் அழைத்து செல்கிறது. பேச்சியம்மன் அல்லது பேய்ச்சி என்று அழைக்கப்படும் தெய்வம் அவர்களை வழிநடத்துவதாக நினைக்கிறார்கள். ரப்பர் தோட்டங்களில், பனை தோட்டங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை பதிவுகள் ஓப்பிடளவில் மிக குறைவு. எல்லா மலேசிய நாவல்கள் ரப்பர் தோட்டங்களிலிருந்து தொடங்குவது ஆச்சரியம் இல்லைதான். .நவீன் எழுதியிருக்கும் பேய்ச்சி நாவல் தோட்ட தொழிலாளர்களின் மூன்று தலைமுறைகளைப் பற்றியது.

கொப்பேரன் பின் அடுத்த தலைமுறையில் ராமசாமி, மணியம், சின்னி, ஓலம்மா, பின் அவர்களின் பிள்ளைகள் என்று நீண்டு செல்கிறது. மூன்று தலைமுறைகளின் வாழ்க்கைமுறைகளின் மாற்றங்களை தெளிவாக பிரித்து சொல்கிறார் நவீன்.

பெண் என்பவள் பேய் அல்லது தெய்வம் என உருவகப்படுத்தபடுவது எல்லா சந்தர்பங்களிலும் சூழ்நிலைகளிலும் நிகழ்வதில்லை. ஒரு குடும்ப, சமூக கட்டமைப்பிற்கும் அவசியம் ஏற்படும்போது இந்த உருவகம் உருக்கொண்டுவிடுகிறது. மலேசியாவில் தமிழர்களின் இன்றைய நிலை என்ன என்பதை பேய்ச்சி வழிபாட்டில் அறிந்துக்கொள்ளலாம். வறிய நிலையில் இருந்த மனிதர்கள் இன்று பெரும் செல்வதர்களாக ஆனபின்னும் பேய்ச்சி தேவையாக இருக்கிறாள். இன்று மறைந்துவிட்ட குலதெய்வ வழிபாட்டின் அவசியம் தோண்டி எடுக்கப்படும் வரலாற்றின் வழியே அம்மக்கள் தங்களை நிறுவிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மலேசிய ரப்பர் தோட்ட மனிதர்களைப் பற்றி சீ.முத்துசாமி சில நாவல்களின் வழியே வெளிகொணர்ந்தார். அதன் தொடர்ச்சியாக பேய்ச்சியும் வந்திருக்கிறது. குலதெய்வ வழிபாட்டை தேடிக்கண்டடைந்து அறிவது ஒரு சமூகத்தின் வேரை சென்றடைவது. நாவலின் வழியே வேரை காண நினைப்பதும் அச்சமூகத்தின் மீதான விமர்சனங்களை வெளிக்கொணர்வதுதான். தமிழ் சமூகமடைந்த பல்வேறு மாற்றங்களை நாம் அறிய பேய்ச்சி நாவல் ஒருவகையில் உதவுகிறது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான விமர்சனம்
நன்றி