Saturday, July 7, 2018

அஞ்சலை: மீறலில் துளிர்க்கும் கனவு


புறஉலகை நேரடியாக உள்ளதை அப்படியே சொல்லும் இயல்புவாத அல்லது யதார்த்த நாவல்களில் அதிகமும் அழகியலை எதிர்பார்க்க முடியாது. ஆசிரியரின் விலகல் கொண்ட நேரடியாக கதைக்கூறலில் மனஎழுச்சி கொள்ளும் இடங்கள் மிக குறைவாகவே இருக்கும். ஆசிரியரும் தன்முனைப்போடு எதையும் வாசகருக்கு சொல்லவேண்டிய அவசியமும் இருப்பதில்லை. இப்படி எல்லாவற்றையும் தாண்டி இயல்புவாத நாவலான அஞ்சலை, மிகுந்த அழகியலோடும், மனஎழுச்சி உணர்வோடும் படைக்கப்பட்டிருக்கிறது. எழுதியிருக்கும் கண்மணி குணசேகரனும் எந்த பெரிய மெனக்கெடல்களும் இல்லாமல் சரியான விதத்தில் உருவாக்கிவிட்டதாகவே தெரிகிறது.


இந்திய நாவல்களில் அடையாளங்களோடும், மீறல்களோடும், தணியாத கண்ணீரோடும் இருக்கிற தனிப் பெண்களின் கதைகள் ஏராளம். அவர்களின் பிரச்சனைப்பாடுகள் வேவ்வேறு வகையானவைகள். நிலம், சாதிப் படிநிலைகள் பொருத்து பிரச்சனைகளின் வீரியம் மாறுபடுகிறது. ஒன்றைவிஞ்சும் மற்றொன்றாக பல வகைகளில் பெண்கள் தங்களை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். பெண்கள் தன் குடும்பம், கணவன், குழந்தைகள் தன் வீடு என்றே இருக்க பிரியப்படுகிறார்கள். சமூக கட்டமைப்புகள் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை தருவதாக காட்டப்படுகிறது. அதற்குள் அவர்கள் புழங்கும்வரை எந்த பிரச்சனைகளும் அவர்களுக்கு இல்லை என்று அழுத்தமாக மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.

தன் மனம் அல்லது உடல் விரும்பும் மீறல்களை பெண்களால் செய்ய முடிவதில்லை. தன் துணை குறித்த விருப்பங்களையும் தேடல்களையும்க்கூட அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. விளிம்புநிலை மனிதர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் இருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், அந்த சுதந்திரத்துடன் மிக நெருங்கிய வட்டத்திற்குள் பொறாமைகளும், வெறுப்புகளும் கூடவே சுழன்று கொண்டேயிருக்கின்றன. தினநிகழ்வுகளையும் தினச்சண்டைகளையும் என பிரித்தரிய முடியாத அவலங்கள் தொடரும் வாழ்க்கை விளிம்புநிலை மனிதர்களுக்கு. ஆனால் இவற்றில்தான் மக்கள் உழல்கிறார்கள், காதல் கொள்கிறார்கள், அன்பும், கருணையும் கொள்கிறார்கள். வயதாகி மடியவும் செய்கிறார்கள்.

பறசேரியில் வாழும் அஞ்சலை மற்ற சாதாரண பெண்களைவிட அழகானவள், மேம்பட்டவள், தைரியமானவள். தனக்கென சில கொள்கைகளை வைத்திருப்பவள். வெளியிலிருந்து வரும் எந்த தாக்குதல்களையும் எதிர்கொள்ளக் தயாராக இருப்பவளாக தன் அகத்தை கட்டுக்குள் வைத்திருப்பவள்.

இயல்பாக எதிர்கொள்ளும் திறனை கொண்ட அழகான சித்தரிப்பினுள் அஞ்சலை பொருந்திபோகிறாள். சிறுமியாக பள்ளிக்கு செல்லாமல் அம்மாவின் கட்டுசாப்பாட்டிற்கு ஓடிவந்துவிடுவதும், வேலையில் சரிக்கு சமமாக ஆண்களுடன் மல்லுகட்டுவதிலும், படாச்சி மகனுடன் போட்டி போடுவதும் என மிக இயல்பாகவே அவள் நிலைத்திருக்கிறாள்.

இரண்டு அக்காக்கள் திருமணம் ஆனபின், அவளது திருமணத்திற்கு பார்க்கும்போது இரண்டாவது அக்காவின் கணவன் அவளையும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அக்காவின் எதிர்ப்பால் வேறுஇடம் பார்க்கிறார்கள். அவள் கிடைக்காத கோபத்தில் ஒரு சுமாரான இடத்திற்கு தள்ளிவிட நினைக்கிறான். மிக தொலைவில் இருக்கும் மணக்கொல்லையில் கருப்பான அசிங்கமான ஒருத்தனுக்கும் அழகாக இருக்கும் அவன் அண்ணனை காட்டி திருமணம் முடித்துவிடுகிறார்கள். திருமணம் முடிந்தபிந்தான் அஞ்சலைக்கு தெரிகிறது. ஆனால் அவன் அண்ணனை மனதில் நினைத்தபடி அங்கேயே இருக்கிறாள். ஓர்படியாளின் சண்டையால் மனமுடைந்து ஊருக்கு திரும்ப நினைக்கும்போது வழியில் பஸ்ஸில் முதல் அக்காளை சந்திக்கிறாள். தன் கொழுந்தனனுக்கு மணமுடிக்க அவளை அழைத்துச் செல்கிறாள். அங்கும் திருமணம் ஆனபின்புதான் தெரிகிறது, அக்காள் அந்த கொழுந்தனை வைத்திருக்கிறாள் என்று. பிறகு ஏன் திருமணம் செய்துவைத்தாள் என நினைப்பில் அங்கிருக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அக்கா தங்கைக்குள் சண்டைகள் வலுக்கின்றன. அக்காவும் கர்ப்பமானபின் பிரிந்து அம்மா வீட்டிற்கு செல்கிறாள். வள்ளியின் துணையுடன் மீண்டும் முதல் கணவனிடம் சேரும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. குழந்தை இடைஞ்சலாக இருக்க, அம்மா வளர்க்கிறாள்.

அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் முதல் குழந்தையை காண நினைக்கும்போதெல்லாம் கணவன் தடைபோடுவதும் அதனால் அவள் சொத்துகளை அவளுக்கு அளித்துவிடுவாள் என்கிற நினைப்பும் அவனுக்கு வருகிறது. முதல் பெண் வளர்ந்த பின் தம்பி கட்டிக் கொள்வான் என நினைக்கிறாள், மகளுக்கு அவன் தவிர யாரும் துணையாக இருக்க முடியாது. ஆனால் அவனோ இரண்டாம் அக்காளின் மகளை திருமணம் செய்ய நினைக்கிறான். அவன் கால்களில் விழுந்து அழுகிறாள், இரக்கமற்று மறுக்க, தன் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள், அவள் மகள் வந்து நான் தான் சாகவேண்டியவள், நீ ஏன் சாகிறாய் என்கிறாள். இருவரும் சமாதனமாகி மகள் கை தூக்கிவிட அஞ்சலை எழுந்துவருகிறாள்.

நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை எந்த குழப்பங்களும் இல்லாமல் சொல்லப்பட்டுவிடுகிறது. அந்த வகையில் கதையின் மீது நமக்கு ஒரு பிடித்தம் வந்துவிட்டாலும், அது இயல்புவாத நாவல்களுக்கே உரிய விலகலுடன்தான் நம்மிடம் தங்கியிருக்கிறது. சிறுவயது அஞ்சலையிலிருந்து தன் மகளை திருமணம் செய்துப் பார்க்க நினைக்கும் நடுவயது பெண் வரை அஞ்சலை சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சனைதான் நாவல். விளிம்பு நிலை மனிதர்கள், குறிப்பாக விருதாசலம் சுற்றியிருக்கும் சிறு கிராமங்களில் வாழும் மக்கள், பற்றிய கதையாக இதை சொல்லலாம்.

சேரிகளில் மனிதர்கள் மிக நெருக்கமாக வாழ்கிறார்கள். அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும், காதலிலிருந்து கலவி வரை, மற்றவர்களுக்கு தெரிந்தே நடக்கிறது. ஒவ்வொன்றும் விமர்சிக்கப்படுகின்றன, கிண்டல் அடிக்கப்படுகின்றன. சீண்டப்படாதவர்கள் சமூகத்தின் கடைசியில் இருப்பவர்கள் என்கிற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. ஓவ்வொன்றிருக்கும் எதிர்வினையாற்றுகிறார்கள்.

சமூகத்தில் நடக்காத ஒன்றை அஞ்சலை செய்துவிடவில்லை. சமூக மீறல்களை அவள் விரும்புகிறாளா என்று தோன்றுகிறது. ஆனால் மனவிருப்பங்களுக்கு எளிதாக ஆட்படுவதும், செய்தபின் அதுகுறித்து தன்னை நொந்துக் கொள்வதுமாக இருக்கிறாள். செய்த தவறுகளை அவளால் திரும்ப எடுக்க முடியவில்லை. சமூக கட்டமைப்புகளுடன் போராடி தன்மனம் போனபோக்கில் மேலும் மேலும் செயல்படுகிறாள்.

நாவலில் விளிம்புநிலை மனிதர்கள் ஆழமற்ற மனிதர்களாக வலம்வருகிறார்கள் என்கிற தோற்றம் ஏற்படுகிறது. உண்மையில் அவர்களின் கலை, வழிப்பாட்டு முறைகள் பற்றி துளிகூட பேசப்படவில்லை, இயல்புவாத நாவலில் இதுவும் ஒரு கூறுதான் என்றாலும் கூட. உண்மையில் அஞ்சலை விரும்புவதுதான் என்ன? அவள் அடைய நினைக்கும் சுதந்திரம் பற்றிய புரிதல் அவளுக்கு இருந்ததா? அஞ்சலை தன் நோக்கில் வாழ்க்கை குறித்த அவதானிப்புகள் எதுவும் இல்லையா? நாவலை வாசிக்கும்போது இது போன்ற கேள்விகள் நம் மனதில் எழுந்துக் கொண்டுதான் இருக்கிறது.

நாவலின் குறைகளாக சில உள்ளன. முக்கியமாக நாவலில் சாதிய படிநிலைகளின் நிலை என்ன? சாதிய ஏற்றதாழ்வுகளால் ஏற்படும் பிரச்சனைகள், அதுகுறித்த அவர்களின் வாழ்க்கை நிலை எதுவும் பேசப்படவில்லை.

ஆனால் அஞ்சலை ஒரு அழகியலை கொண்டிருக்கிறது. வாசிப்பில் கிடைக்கும் புதிய சொற்கள் நம்மை உற்சாகமூட்டுகின்றன. இளம் அஞ்சலை முதிர்ச்சியடைந்து தன் தோல்வியடைந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறாள். துடுக்கான அஞ்சலைக்கு கடைசியில் தெரிகிறது வாழ்க்கை மிக எளிதானது அல்ல என்று.

[தஞ்சைக் கூடல் கூட்டத்தில் 30-6-18 அன்று பேசிய உரையின் கட்டுரை வடிவம்]

No comments: