Thursday, November 11, 2021

குதிரை மரம் விமர்சனம்- தேவதாஸ்

 



தமிழில் மிக அதிகமான கதைகள் எழுதப்பட்ட காலம் கொரோனா தீ நுண்ணுயிரி தாக்கத்தால் பொது முடக்கமும், வீடடங்கும் அமலிலிருந்த காலம். இக் காலத்தில் எழுதப்பட்ட கதை வெள்ளத்தில் சில நல்ல கதைகளும் கவனிப்பாரின்றி அடித்துச் செல்லப்பட்டன. அவற்றில் ஒன்று சொல்வனம் இதழ் 242ல் மார்ச் 14, 2021 அன்று வெளியான கே.ஜே. அசோக்குமாரின்  குதிரை மரம் குறுநாவல், அது குறித்தான ஒரு பார்வை இக்கட்டுரை.

Wednesday, October 6, 2021

சுஜாதாவின் சொல்லுக்காக புனைபெயர் வைத்துக் கொண்டேன்: எழுத்தாளர் ஹரணியின் பேட்டி

. அன்பழகன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் ஹரணி மிக இளம்வயதிலிருந்தே எழுத தொடங்கிவிட்டார். தஞ்சாவூர் ஹரணி என்று சில நேரங்களில் எழுதும் இவர், ஹரிணி என்கிற தன் நண்பரின் குழந்தையின் வைணவ பெயரை சைவ பெயராக மாற்றி ஹரணி என வைத்துக் கொண்டார். அன்பழகன் என்பது கூட அவர் அப்பா, அப்போதைய தலைவர் .அன்பழகன் போல சிறந்த அறிஞராக வேண்டி வைத்தது என்று கூறுவார். அவர் அப்பா அமைத்து கொடுத்த சிறு நூலகத்தின் உந்துதலால் அப்பாவின் விருப்பம்போலவே படித்து கல்லூரி ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் ஆனவர்.

கல்லூரி ஆசிரியர் பணிக்கு தினமும் தஞ்சையிலிருந்து சிதம்பரம் வரை காலையும் மாலையும் பேருந்தில் பல ஆண்டுகளாக பயணம் செய்திருக்கிறார். பிறகு ரயில் சேவை பரவலானதும் ரயிலில் அப்பயணத்தை தொடர்கிறார். அப்பேருந்து பயண அனுபவத்தை 'பேருந்து' எனும் நாவலாக எழுத அது அவரை பிரபலப்படுத்தியது. நீண்ட பேருந்து வாழ்க்கையின் அனுபவத்தை சொல்லும் நாவல், ஒரு பெரிய சமூக வளர்ச்சி வீழ்ச்சி மாற்றத்தை அந்நாவல் முன் நிறுத்துகிறது.

கவிதை, சிறுகதை, நாவல் என்று பல வகைமையில் எழுதியிருக்கும் அவர், ‘அப்பிராணி’ ‘சாலையைக் கடக்கும் நத்தைகள்’ போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். உயிர்க்குடில் (1995), ஒவ்வொரு மழை நாளிலும் (2000), மறுபடியும் நதி வரும் (2002), வலை (2004), காலம் நின்றவர்கள் (2007), புரண்டுபடுக்கும் வாழ்க்கை (2011), செல்லாத நோட்டு (2012), அப்பா (2020) போன்ற சிறுகதை தொகுப்புகளை எழுதியிருக்கிறார். காந்தியும் குமரேசனும் (2015), மிட்டாய் வண்டி சிறுவர் தொகுப்பு (2019) போன்ற சிறார் கதைகளையும் எழுதியிருக்கிறார்.

தஞ்சை ப்ரகாஷுடன் நெருங்கிய நட்பு கொண்டவர், அவருடன் இருந்த மற்ற இலக்கிய நண்பர்களுடனும் நெருக்கமான நட்பை பேணிவருபவர். தஞ்சாவூர் கரந்தையில் வசிக்கும் அவருடனான ஒரு சிறு உரையாடல்.