Sunday, February 23, 2020

ஆன்மாவின் பயணம்: ரூஹ் நாவல் விமர்சனம்


ரூஹ் என்னும் ஆன்மாவை வழிநடத்த நமக்கு தெரிந்ததென்று எதுவுமில்லை. ஆன்மாவின் வழியில் நடக்கும் எதுவும் அர்த்தமிருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஆன்மா சென்றடையும் இடங்களில் அர்த்தங்கள் தெரிக்கும் வாழ்க்கை இருக்கிறது. ஆழத்து கடல்போல இருக்கும் நாமறியா உலகம் நமையறியும் ஒரு காலமும் வருகிறது. சோர்ந்தழைந்து பொருள் சேர்க்கும் வாழ்க்கையில் பொருளறியும் காலமும் ஒருமுறை வந்துவிடுகிறது. பலபடிகளை கடந்து மேலேறிவரும் ஒரு உயிரின் மீதான பாதாளத்தின் அழைப்பு தான் லக்ஷ்மி சரவணக்குமார் எழுதியிருக்கும் ரூஹ் நாவல்.

Wednesday, February 19, 2020

பேரன்பின் முடியுறா வார்த்தைகள்: சி.எம். முத்துவின் படைப்புலகம்


ஒர் எழுத்தாளரின் அனைத்து படைப்புகளையும் விமர்சிக்கும் நிகழ்வு எப்போது சிறப்பானது. முதன்முறையாக தஞ்சைக்கூடல் நிகழ்வில் சி.எம். முத்து அவர்களின் அனைத்து படைப்புகளை குறித்து பேசுகிறோம். இந்நிகழ்வு அவரது 70வது பிறந்தநாளை ஒட்டி நிகழ்கிறது. ஆகவே சிறப்பானதும், தஞ்சை கூடலுக்கு நிறைவானதுமான ஒரு நிகழ்வு.

இயல்புவாத நாவல்களின் சிறப்பு அதை ஆசிரியர் தன் போக்கில் புரிந்துக் கொண்டதை எந்தவித வெளிப்பூச்சுக்கு இடமளிக்காமல் முன்னிலைப் படுத்த முடியும் என்பதுதான். அந்த அழகியலைக் கொண்டு நாம் நாவலை புரிந்துக் கொள்ள முடியும் என்கிற வகையில் எந்த சிடுக்குமற்ற நாவல் வாசிப்பை நமக்கு அளிக்கிறார் எழுத்தாளர் சி.எம்.முத்து. அவர் வெளிப்படுத்தும் புறவயசித்தரிப்புகளை நாம் ஒருங்கிணைத்து அர்த்தப்படுத்திக் கொள்ள வாசகருக்கு இடமளிக்கிறார் சி.எம். முத்து.

கறிச்சோறு விமர்சனம் - செழியரசு


ஆற்றுக்கரையிலோ, வயல் காட்டிலோ அமைந்திருக்கும் முனியாண்டவர் அல்லது சுடலைமாடன் கோயிலில், நல்ல கோடைக் காலதில் பூசைப்போட்டு கிடாவை வெட்டி, அங்கேயே வெயிலில், கல்பொறுக்கி அடுப்புக்கட்டி, சுடச்சுட சோறாக்கி, கொதிக்கக் கொதிக்க குழம்பு வைத்து, பக்கத்துத் தோப்பில் வாழை இலை அறுத்து, அங்கேயே வேப்ப மரத்தடியில், தரையிலும் தலையிலும் சூடுதகிக்க பந்திபோட்டு வாடித்து இலையில் வழிந்தோட கறியும் குழம்புமாய் ஊற்றி, கூட்டமாய்க் குந்தி சாப்பிட்டறிந்தவனின் ருசி, அவனுக்குத்தான் விளங்கும், அதனையும்கூட அவனுக்கு ஓரளவுக்குத்தான் பிறருக்குச் சொல்லமுடியும்.

Tuesday, February 18, 2020

சி.எம்.முத்துவின் மிராசு நாவல் விமர்சனம் - கலைச்செல்வி


ஒரு இலக்கிய நிகழ்வில் மீண்டும் மீண்டும் பேசத்துாண்டுவது இலக்கியம் ஏன்? எதற்காக? என்பது குறித்துதான். அரங்குக்கு வெளியே தஞ்சை சுறுசுறுப்பாக மந்தமாக இளகுவாக எரிச்சலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இடைவிடாத பயணத்திலிருக்கிறார்கள். போக்குவரத்து நெரிகிறது. அலுவலகம் எதன்பொருட்டோ விடுமுறையிலும் இயங்குகிறது. இதிலெ்லாம் தற்சமயத்துக்கு அக்கறையின்றி எதன்பொருட்டோ நாம் இருபது பேராவது புறவுலகை விட்டு தனித்து இயங்க இங்கு கூடியிருக்கிறோம். இலக்கியக்கூட்டங்கள் குறித்து கேள்விப்படுபவர்கள் கூட  இது உப்புக்காகுமா..? புளிக்காகுமா..? என்று நம்மை நகர்த்தி விட்டு ஓடி மறைகிறார்கள். பிறகேன் இலக்கியம்? ஒரே வார்த்தையில் கூற வேண்டுமெனில் நிகழ் வாழ்வுக்கும் மேலதிகமான விரிந்த வாழ்வை இங்கே வாழ முடிகிறது. அதனை மொழியின் வழியே புனைந்தளிக்கும் மயக்கம்தான் இலக்கியம். அதுதான் நம்மை கடத்திக் கொண்டு வந்து இங்கு சேர்த்திருக்கிறது. இலக்கியம் புனைவு மட்டுமல்ல. அது கற்பனையை கொண்டு போடப்பட்ட அறிவுக்கான பாதை. இங்கு பலரின் அனுபவங்களை இலக்கியத்தின் வழி ஒருவரே அடைந்து விடலாம். நிகழ்ந்த வாழ்க்கையிலிருந்து நிகழவிருக்கும் வாழ்க்கைக்கு இலக்கியத்தில் ஏறி சென்று விடலாம். அதுதான் போதை. அதுதான் அதன் பாதை.அந்த பாதையில்தான் சி.எம்.முத்துவும் பயணிக்கிறார். 

முத்து70: வரவேற்புரை

அனைவருக்கும் வணக்கம்.

மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களுக்கும், விழாவிற்கு வந்திருக்கும் நண்பர்களுக்கு என் முதற்கண் வணக்கம்.

விழா நாயகன் திரு சி.எம். முத்து அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன். குடந்தையிலிருந்து ஆர்வத்துடன் சிஎம் முத்துவின் மீது அளப்பரிய அன்புடன் இங்கு வந்திருக்கும் ஜி.பி. இளங்கோவன், ஜி.சரவணன் ஆகியோர்களை வருக வருக என வரவேற்கிறேன். தஞ்சை நாயகர்கள், சி.எம் முத்து அவர்களின் இனிய நண்பர்கள், அவரை குறித்த நட்பு அனுபவத்தை பேச இருக்கும், திருவாளர்கள் நா.விச்வநாதன், நந்தி செல்லதுரை ஆகியோரை வருக வருக என வரவேற்க்கிறேன்.

தஞ்சைகூடல் வாசக குழுவிலுள்ள என் நண்பர்கள், திருவாளர்கள் செழியரசு, வீ.கலியபெருமாள், பா.சாமிநாதன், கலைச்செல்வி, தி.ஹேமலதா, கவியரசுநேசன், ஆசைத்தம்பி, சு.பார்த்திபன், ஆகியோரை வருக வருக என வரவேற்கிறேன்.

Monday, February 10, 2020

உலகின் முதன்மை விமரிசகன் நமக்கு அளிக்கும் செய்தி என்ன? - நட்பாஸ்


நண்பர் கே.ஜே. அசோக்குமார் 'நாவலை ஏன் விமர்சிக்க வேண்டும்,' என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்  (நாவலை ஏன் விமர்சிக்க வேண்டும்). கடந்த சில நாட்களாக அதைப் பற்றி அவ்வப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சமஸ்கிருத வேர்ச்சொல் ஆராய்ச்சிக்கு எல்லாம் போகத் தெரியாது. தமிழில் ‘விமரிசை’ என்ற சொல் இருக்கிறது. ‘விமரிசையான வரவேற்பு தந்தார்கள்’ என்று சொன்னால், ‘கொண்டாடி வரவேற்றார்கள்,’ என்று எடுத்துக் கொள்கிறோம். ஆனால் விமரிசனம் என்று சொன்னால் மட்டும் எதிர்மறை விமரிசனம் என்று நினைக்கிறோம் (இணையத்தில் பெரும்பாலான விமரிசனங்கள் நல்லபடி பாராட்டிதான் வருகின்றன, நாம் எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிந்தவர்களாய் போய் விட்டோம் என்பதால். அதனாலேயே எதிர்மறை விமரிசனம் ஒன்று வந்தால் தனிப்பட்ட பகை, காழ்ப்பு என்று மனம் இயல்பாகவே கணக்கு போட ஆரம்பித்து விடுகிறது).