Monday, December 31, 2018

நட்ராஜ் மகராஜுக்கு ஒரு கூட்டம்


தஞ்சைக்கூடலின் டிசம்பர் (29/12/18) இலக்கிய கூடல் சந்திப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்த எப்போது போன்ற கூட்டமாக அல்லாமல் எழுத்தாளர் தேவிபாரதியின் சிறப்பு பங்கேற்பாகவும், அவரது பிறந்தநாள் விழாவாகவும் அமைந்து விட்டது. இதுவரை நடந்த கூட்டங்களிலிருந்து சிறிது திளைப்பாகவும், கொண்டாட்டமாகவும் இந்த ஆண்டின் கடைசியில் அமைந்தது அடுத்த ஆண்டிற்கு இன்னும் சிறப்பாக செய்ய உத்வேகமாகஇருக்கிறது. எளிய பண்பான மனிதராகவும் தன்னை இன்றும் சாதாரண மனிதனாக காட்டிக் கொள்வதில் பெருமிதத்துடன் இருக்கிறார் தேவிபாரதி. அவர் எழுதிய நடராஜ் மகராஜ் நாவல்தான் இந்த மாத கூட்டத்தின் கலந்துரையாடல் பேசுபொருள்.

Thursday, December 20, 2018

சிலுவைராஜும் புஷ்பராஜும்

ராஜ் கெளதமன் எழுதியிருக்கும் சிலுவைராஜ் சரித்திரத்தை படிக்கும் வாசகன் நாவலாக அணுகுவதா அல்லது தன்வரலாறின் கூறாக அதை அணுகுவதாக என்பதை ஓவ்வொரு பக்கத்தை தாண்டும்போதும் வாசகன் குழம்புவான் என நினைக்கிறேன். ஏனெனில் நாவலாக பார்ப்பதில் இருக்கும் தன்முனைப்பு தன்வரலாற்றிற்கு தேவையிருக்காது. அது தன்பாட்டிற்கு நிகழ்ந்ததை 'கவனத்துடன்' கூறும் நேர்மையை மட்டுமே தன் வழியில் கொண்டிருப்பதை வாசகன் அறிந்தேயிருப்பான். நாவல் புனைவு எனும் சுதந்திரத்துடன் பலவழிகளில் தன்னை முன்னிறுத்து முயற்சியின் சாயலை உடையது. நாவலுக்குரிய விரிவும் வாசக இடைவெளிகளும் வாசகனை தொடர்ச்சியாக சிந்திக்க தூண்டிக் கொண்டேயிருக்கும். தன்வரலாற்றின் எடுத்துரைப்புகள் ஒரளவிற்குமேல் வாசகனை உள்நுழையவிடாமல் தடுப்பவையும் கூட. ஆனால் சிலுவைராஜின் சரித்திரம் ஒரு தன்வரலாறாக (?) இருந்தாலும் அதில் வரும் அங்கதமும், சூழல்விவரிப்பும் நம்மை மிக நெருக்கமாக கொண்டு செல்கின்றன. சிலுவைராஜை ஒரு நெருங்கிய தோழனாக உருவங்கொள்ள செய்கிறது.

Wednesday, December 5, 2018

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018 சாகித்ய அகாடமி விருது


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழில் தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். அதில் முதன்மையானவர் எஸ்.ரா. நாவல், சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், பயணஇலக்கியம், திறனாய்வு என்று பல ஜானர்களின் எழுதி குவித்திருக்கிறார். 125 நூல்கள் இதுவரை அவர் எழுதியுள்ளார்.

முழுநேர எழுத்தாளராக இருக்கும் எஸ்.ரா. வாழ்நாள் சாதனைக்காக இயல், தாகூர் போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். இலக்கியம் மீது தீராத காதல் கொண்டு அவர் படிக்காத புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம். கவனத்திற்கு வரும் அத்தனை சிறந்த புத்தகங்களையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

கரிசல் பூமி அவரது எல்லா படைப்புகளிலும் வெளிபட்டிருக்கிறது. சஞ்சாரம் நாவல்கூட கரிசல் பூமியில் அழைந்து திரியும் நாகஸ்வர கலைஞர்களின் கதை தான். கி,ரா, தேவதச்சன், கோணங்கி போன்ற தன் முன்னோடிகளை போல எஸ்.ராவும் தொடர்வது இயங்கி வருகிறார். இவ்வாண்டு அவர் பெரும் சாகித்ய அகாடமி விருதிற்கு எம் வாழ்த்துகள்.