Saturday, June 22, 2019

காலத்தின் வரிகள்: மீஸான் கற்கள்


சமாதி மீது வைக்கப்படும் நினைவு கற்களான கல்லறை கற்கள், வெறும் வார்த்தைகளை கொண்டவையாக இல்லாமல் வாழ்ந்த மனிதர்களின் பெருவாழ்க்கையை எழுதிச் சென்ற காலத்தின் வரிகளாக பார்ப்பது இன்னும் சிறப்பாக இருக்கும். நீண்ட நெடிய வாழ்க்கையும், சிறிய குறுகிய வாழ்க்கையும் மரணத்தின் முன் ஒரே அர்த்தம் பொதிந்த வாழ்வாகவே எப்போது பார்க்கப்படும். காலம் பெரும் கனவு போல எளியவாழ்வின் மீது மிதந்து செல்கிறது. நேரடியாக புரிந்துக் கொள்ள முடியாத சிக்கல்களை கொண்ட கனவை காலையில் பிரித்து பொருள் கொள்ள முயற்சிப்பதுபோலத் தான் இந்த வாழ்க்கையும் இருக்கிறது. முயற்சிக்கும் வழிகளே வாழ்வு மீதான நம் பார்வைகள் எதுவானாலும் வாழ்க்கை நமக்களிப்பது சிக்கல்களையும் அதிர்ச்சிகளையும்தான். வாழ்வின் முடிச்சுகளும் திருப்பங்களும் நாம் புரிந்துக் கொள்ளமுடியாத கண்ணிகளாக நிலத்தில் மறைந்திருந்து வெடிக்க காத்திருக்கின்றன. 

Friday, June 14, 2019

புரியாதவர்கள் - விமர்சனங்கள்

புரியாதவர்கள்

சொல்வனம் 191வது இதழில் என் சிறுகதை 'புரியாதவர்கள்' வெளியாகியிருக்கிறது. நண்பர்கள் கதை குறித்து விமர்சனங்களை எழுதியிருந்தார்கள். சிலரிடம் நானே கேட்டிருந்தேன். ஏதோ ஒருவகையில் அந்த நண்பர்களின் கருத்துகள் முக்கியமானவையானவை என தோன்றுகிறது.

சில கருத்துக்கள் சம்பிரதாயமானவைகள் என்றாலும், அவைகள் தொகுக்கப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. இன்று ஒருவகையில் அது தேவை என்றே நினைக்கிறேன். எல்லா பக்கங்களிலிருந்தும் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், சமூக நியாய அநியாயங்கள், வேடிக்கைகள், விநோத விளையாட்டுகள் என்று கொட்டப்பட அம்மாவின் அகன்ற கைநிறை உணவு சிறிய குழந்தையின் வாயை அடைப்பதுபோல விழிபிதுங்க நிற்கிறார்கள் வாசகர்கள்.

Thursday, June 13, 2019

பில்டர் காபியின் மணம்


எவ்வளவோ விஷயங்கள் மருத்துவ துறையிலிருந்து வெளிவந்து மக்களை இதைச் செய் இதைச் செய்யாதே என்று சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதில் தினசரி உடல்நலம் பற்றிய செய்தியில் முதலில் இருப்பது காபியை, டீயை தவிர்க்க சொல்வதுதான். அதற்குப்பின், சாராயம், புகையிலை போன்றவைகள் இருக்கலாம். ஆனால் முதலில் இருக்கும் காபி மிகச் சமீபமாக அதாவது ஒரு 250 ஆண்டுகள் இருக்கலாம் அது கண்டுபிடிக்கப்பட்டது. (17ஆம் நூற்றாண்டில் வந்தாலும் பிரபலமாக பரவியது 19ஆம் நூற்றாண்டில்), அதற்குபிறகுதான் இந்தியாவில், தமிழகத்தில் பிரபல்யமாகியது. என் தாத்தாவிடம் ஒரு காபிக் கொட்டை அரைக்கு ஒரு சிறு மெஷின் இருந்தது. அதை டேபிள் போன்ற பலகையில் நிறுத்தி காபி கொட்டைகளை மேலே சிறு கிண்ணம் போன்ற பகுதியில் போட்டு கையால் சுற்ற வேண்டும். தூளாக வெளிவருவதை பில்டரில் போட்டு சுடுதண்ணிரை விடவேண்டும். பிறகே அடியில் பில்டர் காபி கருநிறத்தில் கிடைக்கும். அதை பாலில் சேர்த்து குடிக்கவேண்டும்.
டெல்டா பகுதிகளை தவிர மற்ற இடங்களில் பொதுவாக காபித் தூளை நேரடியாக கொதிக்கும் பாலில் கலந்து சுடவைத்து வடிகட்டி (பில்டரிட்டு) டீயை போல குடிக்கிறார்கள். இன்னும் சிலர் தனியாக தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி பின் பாலுடன் சேர்ந்து குடிக்கிறார்கள். இரண்டும் தவறாக வழிகள். பில்டர் காபியின் மணம்தான் நம்மை அருந்த தூண்டுகிறது. அது புத்துணர்ச்சி (ஃபிரஸ்னஸ்) யுடன் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் குடிக்க தோன்றும்.

Monday, June 10, 2019

கிரேஸியும் நாடகங்களும்



பின்பக்கத்தில் சற்று நீண்ட தலைமுடியும் டை அடித்த ஆனால் வேர்களில் வெள்ளை முடி முளைத்த தோற்றத்துடன் தலையை இங்குமங்குமாக திருப்பியபடி மைலாப்பூரில் ஒரு கடையில் வெத்தலைப் பாக்கு, புகையிலையை வாங்கி மென்றபடி நின்றுக் கொண்டிருப்பார் கிரேஸிமோகன். தொண்ணூருகளின் மத்தியில் அப்படி அவரை மாலை வேளைகளில் பார்த்திருக்கிறேன். அதேபோல அடையாறில் ஒரு கடையில் சிகரெட் குடித்தபடி நிற்கும் பட்டுக்கோட்டை பிரபாகரையும் பார்த்திருக்கிறேன். இவர்களிடம் சும்மாவேணும் கை கொடுத்துவிட்டு போவோம். பகோப விடம் என்ன எழுதுறீங்க இப்ப என்றால் நாவல் என்பார். எதில எழுதுறீங்க என்றால் உல்லாச ஊஞ்சல்ங்க என்பார். மீண்டும்  ஒரு முறை கை கொடுத்துவிட்டு விடைபெறலாம். கிரேஸிமோகன் அதைவிட சுவாரஸ்யமாக பேசுவார். பேசும்போது பின் மண்டை தனியாக ஆடும். எல்லா கேள்விகளுக்கும் அவர் பதிலளிப்பார். ஒரு சின்ன கூட்டம் அவர் முன் நின்று கேட்டுக் கொண்டிருக்கும். பக்கத்தில் திரும்பி கடைக்காரரிடம் ஒரு பீடா கேட்டு வாங்கி மெல்லுவார். போகும்போது இன்னொன்றை வாங்கி மென்றுகொண்டே செல்வார். பேசிய மனிதர்களின் முகங்களை நினைவில் வைத்திருப்பாரா என்பது சந்தேகம். அதை அவர் முகமே காட்டிக் கொடுத்துவிடும். அவர் யாரிடமும் பேசவில்லை. தன்னை ஒரு நிலையில் நிதானப்படுத்திக் கொள்கிறார் அவ்வளவுதான்..

Thursday, June 6, 2019

வருத்தம் தெரிவித்தலும், மன்னிப்பு கோருதலும்



அண்ணா ஒரு சின்ன சந்தேகம். வருத்தம் தெரிவித்தல் , மன்னிப்பு கோருதல் இரண்டு வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தபடுகின்றனவா?

-பிரகாஷ் மூர்த்தி, கிளிநொச்சி.

அன்புள்ள பிரகாஷ்

சாதாரணமாக இதைப் பார்க்கும்போது பெரிய வித்தியாசம் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒரே அர்த்தத்தைதான் அளிக்கின்றன, ஆனாலும் சின்ன வித்தியாசம் இருக்கிறது. மேற்குலக நண்பர்களிடம் பழகுபோது அல்லது மேற்குலக தாக்கம் உள்ள நண்பர்களை சந்திக்கும்போது நமக்கு இந்த சந்தேக எழுகிறது என நினைக்கிறேன்.