Thursday, March 2, 2017

ரெஸ்ட் ரூம்னா டாய்லெட் தானே?



பள்ளியில் நடந்த அல்லது கற்றுக்கொண்ட ஒரு புதிய விஷயத்தை சொல்வதில் மகனுக்கு ஆர்வம் என்றால் கேட்பதில் அதைவிட அதிக ஆர்வம் எனக்கு என்பேன். ஒரு நாள் ரெஸ்ட் ரூம்னா என்ன சொல்லுங்க என்றான்.

டாய்லெட், கழிப்பறை, பாத்ரூம் என்று சொல்ல எதுவும் இல்லை என்றான். நான் அது என்ன என்று கேட்க ரொம்ப நேரம் காக்க வைத்தே சொன்னான். ரெஸ்ட்ரூம்னா நானு உச்சா போறேன்னு அர்த்தம் என்றான். வீட்டில் எல்லா மூலைகளிலிருந்தும் சிரிப்பலைகள் எழுந்தன. அடங்க கொஞ்ச நேரம் ஆகியது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் கழிவறைக்கு பெயர்கள் மாறிவருவது சற்று ஆச்சரியம். முன்பு கொல்லைக்கு போகிறேன் என்பார்கள். உண்மையில் கொல்லையில் ஏதோ பூப்பறிக்க போவதாக நாம் நினைப்பதில்லை. வேறு எந்த காரணத்திற்காகவும் கொல்லைக்கு சென்றாலும் அப்படி சொல்ல மாட்டோம். கொல்லை எடுக்கப்பட்டு வீடுகள் கட்டிவிட்டபின் இன்றும் கிராமங்களில் கொல்லைக்கு போகிறேன் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆத்துக்கு போகிறேன் என்கிற வழக்கமும் இருந்தது. ஆற்றில் தண்ணீர் வந்த காலம். அப்போது குளிக்க மட்டும் போகவில்லை என்று நாம் புரிந்துக் கொண்டிருக்கிறோம்.